search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்-மாணவர்களை படத்தில் காணலாம்.
    X
    சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்-மாணவர்களை படத்தில் காணலாம்.

    விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள்- மாணவர்கள் சாலை மறியல்

    விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம்- திருப்பாச்சனூர் சாலையில் அமைந்துள்ளது தாளாமேடு கிராமம். இந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் ஒரு டாஸ்மாக் கடையும், துரையரசன் நகரில் ஒரு கடையும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதிதாக திறக்கப்பட்டன.

    இந்த கடைகளில் தினமும் ஏராளமான குடிபிரியர்கள் வந்து மது அருந்துவர். போதை தலைக்கேறியதும் அந்த வழியாக சென்ற பெண்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவிகளை கேலியும், கிண்டலும் செய்து வந்தனர். இதனால் அந்த வழியாக செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர்.

    எனவே அந்த 2 டாஸ்மாக் கடைகளையும் உடனே மூட வேண்டும் என கோரி தாளாமேடு பகுதி பொதுமக்கள் கடந்த 12-ந் தேதி (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    மேலும் அந்த மனுவில் மதுக்கடையை மூடாவிட்டால் நாங்களே அந்த கடைகளுக்கு பூட்டுப் போட்டு மூடிவிடுவோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ஆனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அந்த கடைகளை மூடுவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த தாளமேடு பகுதி பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் காலி மது பாட்டில்கள், மதுவுக்கு எதிராக எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி கொண்டு தாளாமேடு மெயின் ரோட்டில் இன்று திரண்டனர்.

    அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மூடு... மூடு... டாஸ்மாக் கடைகளை மூடு... என கோ‌ஷங்களை எழுப்பினர்.

    தகவல் அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜன், மகேஷ் மற்றும் போலீசார், தாசில்தார் சுந்தர்ராஜன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார் மற்றும் அதிகாரிகள், தாளமேடு மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுகிறோம். மேலும் துரையரசன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை இன்னும் 15 நாட்களுக்குள் வேறு இடத்துக்கு மாற்றி விடுவோம் என்று கூறினர்.

    இதையடுத்து தாளாமேடு மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×