search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் பயிர் கருகியதால் விவசாயி தீக்குளித்து மரணம்
    X

    திருவண்ணாமலையில் பயிர் கருகியதால் விவசாயி தீக்குளித்து மரணம்

    திருவண்ணாமலை அருகே பயிர் கருகி கடன் சுமை காரணமாக விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அம்பேத்கர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி அலமேலு (40). இவர்களுக்கு 1½ ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இதில் கடன் வாங்கி மணிலா பயிரிட்டிருந்தனர்.

    இந்த நிலையில் பருவமழை பொய்த்து போனதாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதாலும், மணிலா பயிர் கருகி போனது. இதனால் கடன் சுமை அதிகரித்தது. பணம் கொடுத்தவர்கள் நச்சரித்தனர்.

    இதனால் மனமுடைந்த சங்கர், சம்பவத்தன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் வெந்து கருகிய நிலையில் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் கருகி கடன் சுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியில் இறந்து போகும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர்களை போலவே கருகி மடிந்துள்ளனர்.

    விவசாயிகளை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் கருகிய பயிர்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×