search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செக் மோசடி வழக்கில் முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி
    X

    செக் மோசடி வழக்கில் முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி

    செக் மோசடி வழக்கில் முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை 4-வது கூடுதல் செசன்சு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
    சென்னை:

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு. இவர், ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதில், உதயம் தியேட்டர் பங்குதாரர் மணியும் நிர்வாகியாக உள்ளார். இவர்கள், பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் கடந்த 2002ம் ஆண்டு ரூ.35 லட்சம் கடன் வாங்கினர். இதற்காக காசோலையும் கொடுத்தனர்.

    ஆனால், அந்த காசோலை, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்ததால், அன்பரசு, அவரது மனைவி கமலா, மணி மற்றும் ராஜீவ்காந்தி அறக்கட்டளையின் பெயரில் சென்னை ஜாஜர் டவுண் கோர்ட்டில் போத்ரா வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, ‘அன்பரசு உள்ளிட்டோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அன்பரசு உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை 4வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது, கமலா அன்பரசு இறந்து விட்டார்.

    இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி என்.சாந்தி நேற்று தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில், ‘அன்பரசு உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை உறுதி செய்கிறேன். எனவே, அன்பரசு, மணி ஆகியோரை சிறையில் அடைப்பதற்கான பிடிவாரண்ட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.
    Next Story
    ×