search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர் பிரேம்குமார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுத்த படம்
    X
    மாணவர் பிரேம்குமார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுத்த படம்

    செல்போனில் படம் பார்த்ததால் பிளஸ்-2 மாணவரை தாக்கிய ஆசிரியர்கள் - ஆஸ்பத்திரியில் அனுமதி

    சூளகிரி அரசு பள்ளியில் செல்போனில் படம் பார்த்த பிளஸ்-2 மாணவனை ஆசிரியர்கள் அடித்ததில் மயங்கி விழுந்த அந்த மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1,500 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக முத்தேகவுடா என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பொறுப்பேற்றார்.

    இங்கு சூளகிரியை அடுத்த காமன்தொட்டி அருகே உள்ள கங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவரின் மகன் பிரேம்குமார் (வயது 17) பிளஸ்-2 படித்து வருகிறார்.

    மாணவர் பிரேம்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் செல்போனில் படம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த வேறு சில மாணவர்கள், இது குறித்து தலைமை ஆசிரியர் முத்தேகவுடாவிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஆசிரியர்கள் 3 பேரையும் அழைத்து, மாணவர்களை கண்டிக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அந்த 3 ஆசிரியர்களும் அங்கு சென்று பிரேம்குமாரை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரம் மாணவர் பிரேம்குமாரின் தந்தை கிருஷ்ணப்பா, சீருடை வாங்குவது தொடர்பாக பள்ளிக்கு வந்தார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிந்ததும், அவரும் மகனை அடித்ததாக கூறப்படுகிறது.

    ஆசிரியர்கள் மற்றும் தந்தை அடித்ததில் பிரேம்குமார் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பிறகு மாணவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு பிரேம்குமார் மூச்சுவிட சிரமப்பட்டதால் சிறப்பு மருத்துவ குழுவினரை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை அவருக்கு நினைவு திரும்பியது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சூளகிரியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் அடித்ததில் மாணவர் மயங்கி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று காலை ஓசூர் மவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரன் பள்ளிக்கு சென்று இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×