search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணைகள் பிரச்சினைகளை போக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: ஜி.கே.மணி
    X

    அணைகள் பிரச்சினைகளை போக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: ஜி.கே.மணி

    தமிழ்நாட்டில் விவசாயத்தை பெருக்க தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க உடனடியாக திட்டம் தொடங்க வேண்டும். இதற்காக நீரியல் வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என ஜி.கே. மணி கூறினார்.

    நெல்லை:

    பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் தமிழகம் முன்பு முதன்மை மாநிலமாக விளங்கியது. ஆனால் இப்போது பின்தங்கிய மாநிலமாக இருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் உள்ள பிரதான தொழில் விவசாயம். ஆனால் அந்த விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்துள்ளது. இதற்கு காரணம் காவேரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, பாலாறு போன்ற நதிகள் பிரச்சினைகள் தான்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு பிறகும் மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. காவேரியில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. எனவே இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளையும் நாட்டுடமையாக்க வேண்டும். அணைகள் பிரச்சினைக்காக தமிழகத்தில் உடனடியாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தி டெல்லியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்கால சந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள். எதிர்காலத்தில் தமிழகத்தில் உணவு உற்பத்தி குறைந்து பஞ்சம் ஏற்பட வழி வகுக்கும்.

    தாமிரபரணி ஆற்றில் 140 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. தாமிரபரணி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகளே இப்போதும் உள்ளது. தாமிரபரணி தண்ணீரை முழுமையாக பயன்படுத்த காமராஜர் ஆட்சிக்கு பிறகு வந்த ஆட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே உடனடியாக பல்வேறு தடுப்பணைகள் கட்டி நதிகளை பாதுகாக்க வேண்டும்.

    இதை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் வருகிற 1, 2 ஆகிய இரண்டு நாட்கள் இருசக்கர வாகன பேரணி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் நடக்கிறது. 1-ந்தேதி பாபநாசத்தில் தொடங்கும் பேரணி அன்று மாலை நெல்லையில் நிறைவடைகிறது. அன்று இரவு அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெல்லையில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    மறுநாள் 2-ந்தேதி நெல்லையில் இருந்து தொடங்கும் பேரணி புன்னைக்காயல் வரை சென்று நிறைவடைகிறது. அன்று இரவு தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி தரம் குறைந்து விட்டது. ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரி படிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

    தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பல உயர்கல்வி வாய்ப்புகள் ஆந்திர மாநிலத் தவர்கள் தட்டி பறிக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். இதனால் தான் தமிழ்நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படுகிறது.

    தென் மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள வளர்ச்சிக்கு தமிழக அரசு 40 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால் 2 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. உடனடியாக கூடுதல் பணம் ஒதுக்க வேண்டும்.

    கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் விவசாயத்தை பெருக்க தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க உடனடியாக திட்டம் தொடங்க வேண்டும். இதற்காக நீரியல் வல்லுனர் குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×