search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி வரி விதிப்பில் குறைகளை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்: நிர்மலா சீதாராமன் பேச்சு
    X

    ஜி.எஸ்.டி வரி விதிப்பில் குறைகளை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்: நிர்மலா சீதாராமன் பேச்சு

    ஜி.எஸ்.டி.யில் 18 சதவீத வரி என்று தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது இன்னும் முழுமை பெறவில்லை. கருத்துக்கள் கேட்கப்பட்டு வரிவிதிப்பு குறித்து ஒரே தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

    பீளமேடு:

    கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் பா.ஜனதா சார்பில் ஜி.எஸ்.டி. வரி குறித்த கருத்தரங்கு இன்று நடந்தது.

    இதில் தொழில் மற்றும் வர்த்தக துறை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.

    மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்த குமார், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ரெங்கராஜூ, மாவட்ட துணை தலைவர்கள் கருமுத்து. தியாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் தொழில் முனைவோர்கள், சிறுகுறு தொழில் துறையினர், கிரைண்டர் தொழில் துறையினர், விசைத்தறி துறையினர், ஜவுளி துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் இந்திய பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் ஆடிட்டர் சண்முக வடிவேல் ஜி.எஸ்டி. குறித்து விளக்கவுரையாற்றினார்.

    இதைதொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    நாடு முழுவதும் ஒரே வரிமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரிமுறை கொண்டு வந்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்துவதற்கு முன் நாடு முழுவதும் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள், ஜவுளி துறையினர், சிறுகுறு தொழில் புரிபவர்கள், விசைத்தறியாளர்கள் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதன் மூலம் குறைகளை போக்க ஏற்பாடு செய்யப்படும்.

    தற்போது ஜி.எஸ்.டி.யில் 18 சதவீத வரி என்று தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது இன்னும் முழுமை பெறவில்லை. கருத்துக்கள் கேட்கப்பட்டு வரிவிதிப்பு குறித்து ஒரே தீர்மானமாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து திருச்சி வணிக வரித்துறை ஆணையர் கென்னடி பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி மூலம் நாடு முழுவதும் ஒரே வரி முறை நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் மக்கள் நேரடியாக பயன்பெறுவர். இந்த வரி மூலம் வணிகர்கள் தங்கள் கையில் இருந்து வரி செலுத்த தேவையில்லை. உலக வரிவிதிப்பு முறையில் மிக சிறந்த நடைமுறையாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் ஒழிக்கப்படும்.

    மேலும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பான சந்தேகங்களுக்கு தினமும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமாக பதில் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைதொடர்ந்து கருத்தரங்கில் கலந்து கொண்ட தொழில் துறையினர் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    குறிப்பாக சிறுகுறு தொழில் அமைப்பினர், கிரைண்டர் தொழில் துறையினர் பேசும் போது, வரிவிதிப்பை ஆண்டுக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றனர்.

    இதையடுத்து விசைத்தறி உரிமையாளர்கள் பேசும் போது, விசைத்தறி தொழிலுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து வரி விலக்கு அமல்படுத்த வேண்டும் என்றனர்.

    இதேபோல் பல்வேறு தொழில் அமைப்பினர் தங்களது சந்தேகங்களை கேட்டனர். இதற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    Next Story
    ×