search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அருகே மனைவியை அடித்து கொன்று நாடகமாடிய கணவர் கைது
    X

    நெல்லை அருகே மனைவியை அடித்து கொன்று நாடகமாடிய கணவர் கைது

    நெல்லை அருகே மனைவியை அடித்து கொன்று விட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள விஜயஅச்சம்பாடு மேற்கு தெருவை சேர்ந்தவர் ரகுராம் (வயது35). இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு வேலாயுதம்புரத்தை சேர்ந்த அந்தோணிமுத்து மகள் ஜெயசெல்விக்கும் (33) கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆகாஷ் (5), ரோகித் (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஜெயசெல்வி போலீசாக வேலை செய்தார். திருமணம் நடந்து 3 மாதங்களுக்கு பிறகு போலீஸ் வேலையை ஜெயசெல்வி ராஜினாமா செய்து விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி அதிகாலை ஜெயசெல்வி வீட்டில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்து விட்டதாக கூறி, அவரை ரகுராம் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்துள்ளார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு ஜெயசெல்வியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஜெயசெல்வியின் உடல் விஜயஅச்சம்பாட்டில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயசெல்வியின் தந்தை அந்தோணிமுத்து, விஜயஅச்சம்பாட்டுக்கு வந்து தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர், தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவரை கணவர் அடித்துக் கொலை செய்து விட்டதாகவும் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெயசெல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜெயசெல்விக்கு திருமணம் முடிந்து 7 ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் (பொறுப்பு) மைதிலி மேல் விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், ஜெயசெல்வி பின்னந்தலையில் அடிபட்டு உள்காயம் இருந்ததும், இதனால் அவர் இறந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்து ரகுராமை கைது செய்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், முருகன், ஜெயசெல்வியை அடித்து கொலை செய்ததையும், இதனை மறைக்க கட்டிலில் இருந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்து விட்டதாக கூறி நாடகமாடியதையும் ஒப்புக் கொண்டார்.

    அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நானும், எனது அண்ணன் சேர்மத்துரையும் திருச்சியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தோம். எனக்கும், அண்ணனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால் அவர் தனியாக பிரிந்து கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டார். எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் திசையன்விளைக்கு வந்தேன். இங்கு டி.வி., மிக்சி பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தேன். ஆனால் அதிலும் போதிய வருமானம் கிடைக்கவில்லை.

    எனவே களக்காட்டில் புதிய கடை திறக்க நினைத்தேன். அங்கு நாங்கள் இருவரும் சென்று இடம் பார்த்துவிட்டு, வீடும் பார்த்து விட்டு வந்தோம். மேலும் எனது மனைவி அதிகம் செலவு செய்வாள். இதுதொடர்பாக எனக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவம் நடந்த அன்றைக்கும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் அவளை அடித்து சுவற்றில் தள்ளினேன். இதில் அவர் இறந்து விட்டாள். இதனால் பதற்றம் அடைந்த எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இதனை எப்படியும் மறைத்தாக வேண்டும் என நினைத்தேன்.

    இதையடுத்து ஜெயசெல்வி வீட்டில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்து விட்டதாக கூறி, அவரை திசையன் விளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தேன். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். ஆனாலும் போலீசார் கண்டு பிடித்து என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×