search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் போராட்டம் நடத்த ஜூலை 9-ந் தேதி டெல்லி பயணம்: அய்யாக்கண்ணு
    X

    மீண்டும் போராட்டம் நடத்த ஜூலை 9-ந் தேதி டெல்லி பயணம்: அய்யாக்கண்ணு

    விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த ஜூலை 9-ந் தேதி டெல்லி புறப்பட்டு செல்வதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
    ஸ்ரீவைகுண்டம்:

    விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த ஜூலை 9-ந் தேதி டெல்லி புறப்பட்டு செல்வதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

    இதுகுறித்து அவர் ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    நமது நாட்டின் முதுகெலும்பாகவும், தூணாகவும் விளங்கிய விவசாயிகள் தற்போது நான்காம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை இல்லை. விவசாயிகள் மழை வெள்ளத்தாலும், வறட்சியாலும், பயிர்களில் பூச்சிநோய் தாக்குதலாலும் மாறி, மாறி பாதிக்கப்படுகிறார்கள்.

    கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.3 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசால் முடிகிறது. ஆனால் விவசாயிகளின் கடன்களை மட்டும் மாநில அரசுதான் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி வஞ்சிக்கிறது.



    விவசாயிகளின் நலனுக்காக அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலுக்கு செல்லும் நதிகளை, கிழக்கு நோக்கி திருப்பி விட வேண்டும். மாடுகளை காப்பாற்ற நினைக்கும் மத்திய அரசு, விவசாயிகளை காப்பாற்ற மறுக்கிறது. விவசாயி நன்றாக இருந்தால்தான் மாடுகளை நன்றாக வளர்க்க முடியும். விவசாயிகளை தவிர்த்து விட்டு, மாடுகளை மட்டும் பாதுகாக்க முடியாது.

    60 வயதான அனைத்து விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த ஜூலை 9-ந் தேதி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறோம்.

    ஸ்ரீவைகுண்டம் அணையில் மீண்டும் அமலைச்செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. அவற்றை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×