search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுகலை மருத்துவ படிப்புக்கான தகுதி பட்டியலை தயாரிக்க அவகாசம் வேண்டும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு
    X

    முதுகலை மருத்துவ படிப்புக்கான தகுதி பட்டியலை தயாரிக்க அவகாசம் வேண்டும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

    முதுகலை மருத்துவ படிப்புக்கான புதிய தகுதிப்பட்டியலை தயாரிக்க ஒரு வாரம் கால அவகாசம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பு முடித்தவர்கள், எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது, அவர்களுக்கு மாநில அரசு சலுகை மதிப் பெண் வழங்குவது வழக்கம்.

    எம்.பி.பி.எஸ். பட்டபடிப்பு முடித்து விட்டு, தொலைதூர கிராமங்களிலும், மலை கிராமங்களிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில் 10 முதல் 30 சதவீதம் சலுகை மதிப்பெண் வழங்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் கூறுகின்றன.

    அதேநேரம், தொலைதூர கிராமம், குக்கிராமம், மலை கிராமம் என்று வரையறை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது.

    இந்த நிலையில், தமிழகத்தில் தொலைதூர கிராமம், குக்கிராமம் உள்ளிட்டவைகளை வரையறை செய்து, அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்களுக்கு மதிப்பெண் வழங்கும் தொடர்பாக கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையின்படி, கவுன்சிலிங் நடத்தி, முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதிப் பட்டியலையும் வெளியிட்டது.

    இதை எதிர்த்து டாக்டர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜீவ் ‌ஷக்தேர், ஆர்.சுரேஷ்குமார் விசாரித்து கடந்த 16-ந் தேதி உத்தரவிட்டனர். அதில், ‘ஐகோர்ட்டு மதுரை கிளை அருகேயுள்ள ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார மையத்தை, தொலைதூர கிராமத்தில் உள்ள ஆஸ்பத்திரி என்று தமிழக அரசு வரையறை செய்துள்ளது.

    இதுபோல, நகர் பகுதிக்கு மிக அருகில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் என்று வரை செய்துள்ளதை ஏற்க முடியாது.

    எனவே, இதுதொடர்பாக மே 7-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும், முதுகலை மருத்துவ படிப்புக்கான தகுதிப் பட்டியலையும் ரத்து செய்கிறோம். உண்மையான தொலைதூர கிராமங்கள், குக்கிராமங்கள், மலை கிராமங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கி 3 நாட்களுக்குள் புதிய தகுதிப்பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், ஐகோர்ட்டு உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை. இதனால், முதுகலை மருத்துவ படிப்புக்கான புதிய தகுதிப்பட்டியலை தயாரிக்க ஒரு வாரம் கால அவகாசம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    Next Story
    ×