search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேல்மருவத்தூரில் 50 பயணிகளுடன் வந்த சென்னை அரசு பஸ் தீப்பிடித்தது
    X

    மேல்மருவத்தூரில் 50 பயணிகளுடன் வந்த சென்னை அரசு பஸ் தீப்பிடித்தது

    மேல்மருவத்தூரில் பயணிகளுடன் வந்த சென்னை அரசு பஸ் தீப்பிடித்தது. பயணிகளை இறக்குவதற்காக பஸ்சை மெதுவாக ஓட்டி வந்தபோது தீப்பிடித்ததால் டிரைவரால் வண்டியை நிறுத்த முடிந்தது. அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர் தப்பினர்.
    மதுராந்தகம்:

    விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை அரசு விரைவு பஸ் வந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர். டிரைவர் நீலகண்டன் பஸ்சை ஓட்டினார்.

    காலை 7 மணி அளவில் மேல்மருவத்தூர் பஸ்நிலையத்தில் நிறுத்துவதற்காக பஸ்சை மெதுவாக ஓட்டி வந்தார். அப்போது திடீரென பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்தது.

    அதிர்ச்சி அடைந்த டிரைவர் நீலகண்டன் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பயணிகள் கீழே இறங்கவும் எச்சரித்தார்.

    இதனால் பதட்டம் அடைந்த பயணிகள் அலறியடித்து பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர். இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    காற்றில் வேகத்தில் தீ மளமளவென பஸ் முழுவதும் பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பஸ்சின் பெரும் பகுதி எரிந்து நாசமானது.

    பயணிகளை இறக்குவதற்காக பஸ்சை மெதுவாக ஓட்டி வந்த போது தீப்பிடித்ததால் உடனடியாக டிரைவரால் வண்டியை நிறுத்த முடிந்தது. அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர் தப்பினர்.

    நெடுஞ்சாலையில் வேகமாக வந்தபோது தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

    பஸ்சில் தீப்பிடித்த உடன் டிரைவரும், கண்டக்டரும் சாமர்த்தியமாக பயணிகளை உஷார்படுத்தியதால் அவர்களால் தப்பிக்க முடிந்தது. அவர்களை பயணிகள் பாராட்டினர்.

    இது குறித்து பயணிகள் கூறும்போது, மேல்மருவத்தூர் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதற்காக பஸ்சை டிரைவர் மெதுவாக ஓட்டி வந்தார். திடீரென பஸ்சில் தீப்பிடித்தது என்று பயணிகள் கூச்சலிட்டனர். பயந்து போன அனைவரும் அதிர்ச்சியோடு கீழே இறங்கினோம். கடவுளின் அருளால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.

    ஏற்கனவே அரசு பஸ்களை ஊழியர்கள் சரிவர பராமரிப்பது இல்லை என்ற குற்ச்சாட்டு உள்ளது. நெடுந்தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்களை தினமும் சோதனை செய்து அனுப்ப வேண்டும். பொது மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது’ என்றனர்.

    இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×