search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் மீது வழக்குப்பதிவு
    X

    தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் மீது வழக்குப்பதிவு

    நாங்குநேரி அருகே தவறான சிகிச்சை அளித்து இளம்பெண் பலியான சம்பவம் குறித்து பெண் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கல்லத்தி பகுதியை சேர்ந்தவர் மனோகர் (வயது 50). இவருடைய மகள் உஷாராணி (வயது 17). பிளஸ்-2 படித்து முடித்துள்ள இவர், மூலைக்கரைப்பட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 18-ந் தேதி இரவு உஷாராணிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை அவரை மூலக்கரைப்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். பின்னர் மதியம் திடீரென உஷாராணி உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    இதையடுத்து, தனது மகள் சாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்ததே காரணம் என்று கூறி மூலக்கரைப்பட்டி போலீசில் மனோகர் புகார் செய்தார். போலீசார் உஷாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் உஷாராணியின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் உள்பட 200 பேர் மூலைக்கரைப்பட்டியில் உள்ள அந்த தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் ஆஸ்பத்திரி முன்பு மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர், வடக்கு விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் வெர்ஜின் சேவியோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையின் போது, அந்த ஆஸ்பத்திரியை மூட வேண்டும், சம்பந்தப்பட்ட டாக்டரை கைது செய்ய வேண்டும், அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம் எனக்கூறி சாலை மறியலை கைவிடுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்நிலையில் மறியலில் ஈடுபட்டதாக தமிழர் விடுதலை களம் மணிகண்டன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஜெபா பாண்டியன் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். உஷாராணி சாவு குறித்து நாங்குநேரி தாசில்தார் ஆதிநாராயணன் விசாரணை நடத்தினார். பின்னர் இது தொடர்பாக தனியார் மருத்துவமனை சித்தா டாக்டர் ஜெபா சேர்மதுரை மீது 419, 15(3)ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் உஷாராணியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் உஷாராணியின் உடலை அவரது குடும்பத்தார் பெற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×