search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோசஸ்மேரி - கந்தவேல்
    X
    ரோசஸ்மேரி - கந்தவேல்

    சந்தவாசல், ஆரணியில் கன்னியாஸ்திரி உள்பட 4 போலி டாக்டர்கள் கைது

    சந்தவாசல், ஆரணி பகுதிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த கன்னியாஸ்திரி உள்பட போலி டாக்டர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் பொதுமக்களுக்கு டாக்டர் என்ற பெயரில் போலி நபர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தது. போலி டாக்டர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுகாதார துறைக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார்.

    மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கிரிஜா தலைமையில் போளூர் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா, உதவியாளர்கள் குமரேசன், ரகுபதி மற்றும் திருவண்ணாமலை டவுன் போலீஸ் ஏட்டுகள் பாஸ்கரன், கணபதி ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்ணமங்கலம், சந்தவாசல் மற்றும் படவேடு பகுதியில் போலி டாக்டர்கள் உள்ளார்களா? என திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது படவேடு மண்டபம் பகுதியில் ஐசக் (வயது 57) என்பவர் பி.எஸ்சி., படித்து விட்டு ஆங்கில வைத்தியம் அளிப்பது தெரியவந்தது. இதேபோல் சந்தவாசல் பஜார் பகுதியில் குண்ணத்தூரை சேர்ந்த கங்காதரன் (55) என்பவர் பிளஸ்-2 முடித்து விட்டும், ரோசஸ்மேரி (50) என்ற கன்னியாஸ்திரி, நர்சு பயிற்சி முடித்து விட்டு ஆங்கில வைத்தியம் செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஐசக், கங்காதரன், ரோசஸ்மேரி ஆகிய 3 பேரையும் சுகாதாரப்பணிஅதிகாரிகள் பிடித்து சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய ஆங்கில மருந்துகள், ஊசி மற்றும் மருத்துவ உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கிரிஜா சந்தவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் ஆரணியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் கந்தவேல் (42) என்பவர் நடத்தும் கிளினிக்கையும் பார்வையிட்டனர். அப்போது அவர் எம்.பி.பி.எஸ்.படிக்காமல் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து டாக்டர் என கூறி ஆங்கில வைத்தியம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து கந்தவேலை சுகாதார பணிகள் துறை அதிகாரிகள் பிடித்து களம்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

    அந்த பகுதியில் யாரேனும் போலி டாக்டர்கள் உள்ளனரா? என்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×