search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் வாங்கிய விதவை பெண்ணிடம் அதிக தொகை கேட்பதா?: வங்கி மேலாளர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
    X

    கடன் வாங்கிய விதவை பெண்ணிடம் அதிக தொகை கேட்பதா?: வங்கி மேலாளர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

    கடன் வாங்கிய விதவை பெண்ணிடம் அதிக தொகை கேட்பதா? வங்கி மேலாளர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் ராதிகா குமரன். இவரும், இவரது கணவரும் சேர்ந்து புதுச்சேரியில் வீடு வாங்கினார்கள். இதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.33 லட்சம் கடன் வாங்கினர். இந்த கடன் தொகையை வட்டியுடன், 120 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த கடன் வாங்கும் போது வீட்டு கடனுக்கான இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றும் எடுத்திருந்தனர்.

    இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ராதிகா குமரனின் கணவர் இறந்து விட்டார். இதன்பின்னரும் கடனுக் குரிய மாத தவணையை அவர் செலுத்தி வந்துள்ளார். அப்போது, கடனுக்காக இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பதால், அந்த தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வங்கி நிர்வாகம் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் இனி தவணை தொகையை செலுத்த தேவையில்லை என்றும் ராதிகாவுக்கு தெரிய வந்தது.

    இதை வங்கி நிர்வாகத்திடம் கூறிய போது, அதை மேலாளர் ஏற்கவில்லை. இதையடுத்து ராதிகா குமரன், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி கோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர், ‘இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கப்பட்டுள்ளதால், நிலுவையில் உள்ள கடன் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வங்கி நிர்வாகம் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு வாங்கப்பட்ட தொகையை கழித்து விட்டு பாக்கித் தொகையை மனுதாரரிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவை வங்கி மேலாளர் அமல்படுத்த வில்லை. இதையடுத்து வங்கி மேலாளருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில், ராதிகா குமரன் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். அதில், ‘இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், வங்கி மேலாளர் அதை அமல்படுத்தவில்லை. வீட்டு கடனை நானும், என் கணவரும் சேர்ந்து வாங்கியுள்ளோம் என்றும் தற்போது கணவர் மட்டும் இறந்து விட்டதால், அவர் பங்கிற்கான தொகை 50 சதவீதம் மட்டுமே இன்சூரன்ஸ் பாலிசி மூலம் கழித்துக் கொள்ளப்படும்’ என்று கூறுகிறார். ரூ12 லட்சத்தை நான் செலுத்த வேண்டும் என்று நோட்டீசு அனுப்பியுள்ளார்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, ரூ.12 லட்சம் செலுத்த தேவையில்லை. ரூ.6 லட்சம் செலுத்தினால் போதும் என்று வங்கி மேலாளர் அறிக்கை தாக்கல் செய்தார்.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘வீட்டு கடனுக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும்போது, அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் தொகை முழுவதையும் பெற்று, மீத முள்ள தொகையைத் தான் கேட்க முடியும். முதலில் ரூ.12 லட்சம் என்றும் பின்னர் ரூ.6 லட்சம் என்றும் வங்கி நிர்வாகம் பேரம் பேசுவது சட்டப்படி ஏற்க முடியாது. அதனால், வருகிற 22ந் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு புதுச்சேரி பாரத ஸ்டேட் வங்கியின், அண்ணாசாலை கிளை மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தர விட்டனர்.

    Next Story
    ×