search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் பங்கேற்பார்: எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன்
    X

    இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் பங்கேற்பார்: எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன்

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் டி.டி. வி. தினகரன் கலந்து கொள்வார் என்று எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன்தெரிவித்தார்.
    ஆண்டிப்பட்டி:

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஒன்றாக செயல்பட்டு வந்த அ.தி.மு.க. தற்போது 3 அணிகளாக பிளவுபட்டுள்ளது. மொத்தம் உள்ள 135 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் உள்ளனர். மீதமுள்ள 123 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க. அம்மா அணியில் உள்ளனர்.

    இவர்களில் 34 பேர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களாக மாறி உள்ளதால் தினகரன் அணி என்ற 3-வது அணி உருவாகி உள்ளது.

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் வெளியே வந்த அவர் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபடபோவதாக தெரிவித்தார். இதனையடுத்து தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து வருகின்றனர்.

    சென்னையில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளரும், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வுமான தங்கதமிழ் செல்வன் கூறியதாவது:-

    சென்னை வர்த்தக மையத்தில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் வருகிற 21-ந் தேதி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சி டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். அவர் மற்ற அமைச்சர்களுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறி உள்ளார். நிச்சயம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் பங்கேற்பார்.

    மாவட்ட வாரியாக நிர்வாகிகள் அவரை சந்தித்து வரும் நிலையில் நேற்று தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகள் டி.டி.வி. தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.

    அப்போது தேனியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் அக்கூட்டத்துக்கு டி.டி.வி. தினகரன் தலைமை தாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் பொதுச் செயலாளர் சசிகலாவிடம் தெரிவித்து விட்டு முடிவு செய்யலாம் என்று கூறி உள்ளார்.

    தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பதால் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை எங்களால் சந்திக்க முடியவில்லை. கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் நாங்கள் அனைவரும் அவரை சந்திக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×