search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருவமழை ஏமாற்றியதால் கல்லணை வறண்டது
    X

    பருவமழை ஏமாற்றியதால் கல்லணை வறண்டது

    விவசாயத்திற்கு தண்ணீரை பகிர்ந்து வழங்கும் கல்லணை பாலைவனமாய் தண்ணீர் இன்றி காட்சி அளித்துக் கொண்டுள்ளது. கல்லணைக்கு தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இருக்குமா? என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

    பூதலூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் காவிரி டெல்டா பாசன பகுதியின் விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பு, மற்றும் நீர் வரத்து திருப்திகரமாக இல்லை. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது என்று வானிலையாளர்கள் சொன்னபோதும் மழை எங்கு பெய்கிறது. பெய்யும் மழை தண்ணீர் எந்த அணைகளுக்கு போகிறது என்பது தெரியவில்லை. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்யும் அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து கர்நாடக அணைகள் நிரம்பி, வரும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்து அதன் பின்னர் அணை திறந்து காவிரிடெல்டா பகுதி வந்து சேர்ந்து குறுவை சாகுபடி செய்ய இயலுமா? என்பது சந்தேகமே.

    காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் குறுவை 4½லட்சம் ஏக்கரிலும், சம்பா 7½ லட்சம் ஏக்கரிலும் பயிர் செய்யப்படும். குறுவை சாகுபடி மேற்கொள்ள மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்பட்டு, ஜூன் 16 அல்லது 17-ல் கல்லணை திறக்கப்பட்டு காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்கள் வழியாக கடைமடை வரை சென்றடைந்தால் இந்த பரப்பில் குறுவை சாகுபடி செய்ய இயலும். இந்த ஆண்டு குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தொடர்ந்து 6-வது ஆண்டாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைக்கு தண்ணீர் திறந்து விட இயலாத நிலை உருவாகி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12-க்கு பதிலாக 6 நாட்கள் முன்னதாக அதாவது ஜூன் 6-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட 1934-ம் ஆண்டிலிருந்து ஜூன் 12-ந்தேதி 15 முறைதான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 11முறை ஜூன் 12-க்கு முன்னதாகவும், 56 முறை ஜூன் 12-ந்தேதிக்கு பின்னரும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு அதுவும் முழுமையாக பாசனத்திற்கு விட முடியாத நிலை உருவாகி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். நட்ட பயிரை காப்பாற்ற டெல்டா விவசாயிகள் ரத்த வியர்வை சிந்தி பயிரை காப்பாற்றினார்கள். காவிரியில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமை தண்ணீரை விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் கர்நாடக அரசு செவிசாய்க்காமல் தண்ணீரை திறந்து விடவில்லை. தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,ஒழுங்காற்று குழுவை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கரடியாய் கத்தியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. இது தமிழ்நாட்டு விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

    கடந்த ஆண்டுகளை போல இல்லாமல் இந்த ஆண்டாவது பருவமழை பெய்து சாகுபடி செய்யலாம் என்ற நம்பிக்கையில் இருந்து விவசாயிகளுக்கு பருவம் கண்ணாமூச்சி காண்பித்துக் கொண்டுள்ளது. காவிரி டெல்டா விவசாயத்திற்கு தண்ணீரை பகிர்ந்து வழங்கும் கல்லணை பாலைவனமாய் தண்ணீர் இன்றி காட்சி அளித்துக் கொண்டுள்ளது. மேட்டூரிலேயே தண்ணீர் இல்லை. கல்லணைக்கு தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இருக்குமா? என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்பட்டிருந்தால் இன்று (ஜூன்16) கல்லணையில் இருந்து தண்ணீர்திறக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்படுவதற்காக கல்லணை அலங்கரிக்கபட்டிருக்கும். ஆனால் எதுவும் நடைபெறாமல் வறண்ட பாலைவனமாய் கல்லணை உள்ளது. ஆனாலும் விவசாயிகள் கோடையில் அவ்வப்போது பெய்த மழையை பயன்படுத்தி வயல்களில் கோடை உழவு செய்து இந்த ஆண்டு மழை பெய்து தண்ணீர் வந்து சாகுபடி செய்யலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

    Next Story
    ×