search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறிஞ்சிப்பாடி அருகே காதலிக்க மறுத்த மாணவியை வி‌ஷம் கொடுத்து கொல்ல முயன்ற வாலிபர்
    X

    குறிஞ்சிப்பாடி அருகே காதலிக்க மறுத்த மாணவியை வி‌ஷம் கொடுத்து கொல்ல முயன்ற வாலிபர்

    குறிஞ்சிப்பாடி அருகே ஒருதலை காதலால் மாணவிக்கு வி‌ஷத்தை கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மண்டபமேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயி. இவரது மகன் சசிதரன் (வயது 20). இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார்.

    அதே தெருவைச் சேர்ந்த உறவினர் செல்வி (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்துள்ளார். இந்த நிலையில் சசிதரன் செல்வியை ஒருதலையாக காதலித்தார். தனது காதலை பலமுறை அவரிடம் கூறினார். ஆனால், செல்வி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

    இது குறித்து சசிதரன் தனது நண்பர் கோகுலிடம் கூறினார். செல்வியை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஏரி கரைக்கு அழைத்து வரும்படி கூறினார். அதன்படி அவரும் செல்வியை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் ஏரி கரைக்கு அழைத்து வந்தார். பின்னர் செல்வியை அங்கு விட்டு விட்டு அவர் சென்று விட்டார்.

    அப்போது மாணவி செல்வியிடம் சசிதரன் நான் உன்னை காதலித்து வருகிறேன். நீ என்னை காதலிக்க வேண்டும் என்று கூறி வற்புறுத்தினார். ஆனால், மாணவியோ அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

    மேலும் நாம் இருவரும் அண்ணன்-தங்கை உறவு முறை என்று கூறி கண்டித்தார். ஆனால், இதை சசிதரன் ஏற்க மறுத்தார். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த வி‌ஷப்பாட்டிலை எடுத்து திறந்து செல்வியின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினார். அவரது காதிலும் வி‌ஷத்தை ஊற்றி கொலை செய்ய முயன்றார். சிறிது நேரத்தில் செல்வி அங்கேயே மயங்கி விழுந்தார்.

    பின்னர் சசிதரனும் வி‌ஷத்தை குடித்தார். அவரும் மயங்கி விழுந்தார். 2 பேர் மயங்கி கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். சசிதரன், செல்வி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செல்வி புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சசிதரன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சசிதரன் மேலும் செல்வியை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த கோகுல் ஆகியோர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒருதலை காதலால் மாணவிக்கு வி‌ஷத்தை கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×