search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்டி பிஜின்
    X
    குட்டி பிஜின்

    கோடநாடு காவலாளி கொலை-கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது

    கோடநாடு காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது செய்யப்பட்டார். இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    கோத்தகிரி:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த மாதம் 24-ந் தேதி மர்ம கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரை தாக்கி, பங்களாவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது.



    இந்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார். மற்றொரு குற்றவாளியான சயன் கேரள மாநிலம் கண்ணாடி என்ற இடத்தில் கார் விபத்தில் சிக்கி தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ் சாமியார், தீபு, மனோஜ் சாமி, உதயகுமார், சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட ஜித்தின்ராய், ஜம்ஷீர் அலி ஆகியோர் மற்றொரு வழக்கில் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் திருச்சூர் முகுந்தாபுரத்தை சேர்ந்த குட்டி பிஜின் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்று அவரை கேரளாவில் கைது செய்தனர். பின்னர் அவரை கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையில் தனிப்படை போலீசார் சுமார் 1 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அவரை சம்பவம் நடந்த கோடநாடு எஸ்டேட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு அவர், நடந்த சம்பவத்தை நடித்து காட்டினார். இதனை போலீசார் வீடியோ பதிவு செய்து கொண்டனர். அதன் பின்னர் அவரை, கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதர் முன்பாக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த அவர், குட்டி பிஜினை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறுகையில், “இந்த சம்பவத்தில் இன்னொரு முக்கிய குற்றவாளியான சயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்கள் அவரை ‘டிஸ்சார்ஜ்’ செய்தவுடன் கைது செய்து போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளோம். அதில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம்” என்றார்.

    கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கொண்ட கும்பலில், இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தற்போது கைதான குட்டி பிஜின் மீது கேரளாவில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் கள்ளச்சாவி போட்டு பீரோக்களை நைசாக திறந்து திருடுவதில் கைதேர்ந்தவர். இதனால் இவரை கோடநாடு எஸ்டேட் பங்களாவில் புகுந்து சூட்கேஸ்களை திறந்து கொள்ளையடிக்க கொள்ளை கும்பல் அழைத்து வந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    Next Story
    ×