search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கழுத்தை அறுத்து மீனவர் கொலை: உச்சிப்புளியில் பதட்டம்- போலீஸ் குவிப்பு
    X

    கழுத்தை அறுத்து மீனவர் கொலை: உச்சிப்புளியில் பதட்டம்- போலீஸ் குவிப்பு

    கழுத்தை அறுத்து மீனவர் கொலை செய்யப் பட்டதால் உச்சிப்புளியில் பதட்டம் நிலவுகிறது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள தர்காவலசை கிராம தலைவர் ஆண்டி. இவரது மகன் நாகராஜ் (வயது35), மீனவர்.

    இவர் அந்த பகுதியில் நேற்று லட்சுமணன் (30) என்பவருடன் நடந்து சென்ற போது சிலர் வழி மறித்தனர். அவர்கள் நாகராஜ் மற்றும் லட்சுமணனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    வெட்டுக்காயத்துடன் லட்சுமணன் தப்பிய நிலையில், நாகராஜ் மட்டும் கொலை கும்பலிடம் சிக்கி கொண்டார். அந்த கும்பல் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியது.

    இந்த சம்பவம் உச்சிப்புளி பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    காயத்துடன் தப்பிய லட்சுமணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்கா வலசை பழனி, தோப்பு வலசை காளீஸ்வரன், மரா வெட்டி வலசை குமார், சுரேஷ், பார்த்திபன் மற்றும் 20 பேர் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்காவலசையை சேர்ந்த மீனவர்கள் சிலர் திருச்சியில் நடந்த விழாவுக்கு சென்றபோது மற்றொரு பிரிவினர் கேலி செய்தனர். இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்தனர்.

    தோப்புவலசை வைரவ பாண்டி (33) புகாரின்பேரில் 30 பேர் மீதும், ஆனந்தன் (33) புகாரின்பேரில் 17 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக ஆனந்தன், அழகத்தான் வலசை ராஜா (22), கார்த்திக் கண்ணன் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் தான் மீனவர் நாகராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×