search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் 200 நிறுவனங்களில் குடிநீர் கேன் தயாரிப்பு நிறுத்தம்
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் 200 நிறுவனங்களில் குடிநீர் கேன் தயாரிப்பு நிறுத்தம்

    மத்திய அரசு குடிநீர் கேன் மீது 18 % சரக்கு சேவை வரி எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 200 தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
    திருவள்ளூர்:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 400 குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 200 நிறுவனங்கள் உள்ளன. மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் குடிநீர் கேன் விநியோகிக்கப்படுகிறது

    மத்திய அரசு குடிநீர் கேன் மீது 18 சதவீதம் சரக்கு சேவை வரி விதித்து இருப்பதை கைவிட வலியுறுத்தி நேற்று முதல் குடிநீர் கேன் தயாரிப்பு நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 200 தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கிறார்கள். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ‘கிரேட்டர்’ தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க பொது செயலாளர் கோபிநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐ.எஸ்.ஐ. தர சான்றிதழ் பெற்ற குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடி நீர் எடுக்கக்கூடாது என்று கூறி குடிநீர் நிறுவனங்களை அரசு மூடி ‘சீல்’ வைத்து வருகிறது. இதுவரை 33 இடங்களில் மூடப்பட்டுள்ளன. இதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மூடிய நிறுவனங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டும்.

    குடிநீர் கேனுக்கு 18 சதவீதம் சரக்கு சேவை வரியை மத்திய அரசு விதித்து இருக்கிறது. இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டிக்கத்தக்கது. இந்த வரி விதிப்பால் குடிநீர் கேன் விலை ‘கிடு கிடு’வென உயரும் எனவே குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குடிநீர் கேன் தட்டுப்பாட்டால் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 20 லிட்டர் குடிநீர் கேன் தற்போது 90 முதல் 100 வரை விற்கப்படுகிறது மாவட்டத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வீடு, விடுதி, உணவகம், தொழிற்சாலை ஆகிய இடங்களில் குடிநீர் கேன்களை நம்பி தான் இருக்கின்றனர். இந்த சமயத்தில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பொன்னேரி, பொன்னகரில் தனியார் தண்ணீர் கேன் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது பற்றி அறிந்ததும் பழவேற்காடு, மணலி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தண்ணீர் கேன் சில்லறை வியாபாரிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் அங்கிருந்த தண்ணீர் கேன்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

    பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கூடுதல் விலை கொடுத்து பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
    Next Story
    ×