search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் அருகே 90 அடி உயரம் வளர்ந்துள்ள அதிசய பனைமரம்
    X

    ராமநாதபுரம் அருகே 90 அடி உயரம் வளர்ந்துள்ள அதிசய பனைமரம்

    ராமநாதபுரம் அருகே அதிசயிக்கத்தக்க வகையில் 90 அடி உயரம் பனை மரம் வளர்ந்துள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் ஒருநிமிடமாவது நின்று பார்த்துச் செல்வதை காணமுடிகிறது.
    கீழக்கரை:

    கேட்டதை கொடுக்கும் தேவலோகத்து மரம் என்று அழைக்கப்படும் பனை மரம் ஆண் பனை, பெண் பனை, கூந்தல்பனை, ஈச்சம்பனை, சீமைப்பனை, இளம்பனை, குடைப்பனை, காந்தம்பனை, தாதம்பனை, கிச்சிலிப்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, சனம்பனை, நிலப்பனை, ஈரம்பனை, திப்பிலிப்பனை என பல்வேறு வகைகளாக பரந்து விரிந்து நிலப்பரப்பெங்கும் வளர்ந்து வரும் மரம் ஆகும். பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன்தருவதால் இதனை கற்பகத்தரு என்றும் அழைக்கிறார்கள்.

    நீண்ட நெடிய வடிவில் உயரமாக வளரும் தன்மை கொண்ட இந்த பனை மரம் நன்கு வளர்ந்திருந்தால் அதிகபட்சம் 90 அடி வரை உயரம் வளரும் என்று கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் 50 முதல் 60 அடி வரையிலான பனைமரங்களே தற்போது அனைத்து இடங்களிலும் வளர்ந்து காணப்படுகின்றன. இதற்கு மேல் வளர்ந்துள்ள பனைமரங்களை காணமுடியாத நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே 90 அடி உயர பனைமரம் நன்கு வளர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே உள்ள முத்துப்பேட்டை சேதுநகரை சேர்ந்தவர் தமியன்அருள்(வயது 68). ஆரம்பப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவருக்கு சொந்தமான நிலத்தில் ஏராளமான மரங்களை வளர்த்து வருகிறார். இவருடைய நிலத்தில் வளர்ந்துள்ள ஏராளமான பனை மரங்களில் ஒரு பனை மரம் மட்டும் 90 அடி உயரம் வளர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது. அண்ணாந்து பார்ப்பதால் ஆச்சர்யப்படும் வகையில் வளர்ந்துள்ள இந்த பனை மரம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட மரமாக அதிசய மரமாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமியன்அருள் கூறியதாவது:– எனது முன்னோர்கள் காலத்தில் நடப்பட்ட இந்த மரம் நன்கு வளர்ந்து தற்போது 90 அடி உயரம் உள்ளது. முன்னோர்கள் வளர்த்த இந்த மரத்தை தொடர்ந்து பாதுகாத்து வருகிறோம். வைரம் பாய்ந்த மரமாக உள்ள இதன் முழுபயனையும் அனுபவிக்க முடியவில்லை. இருப்பினும் இதன் அருமை கருதி பத்திரமாக பாதுகாத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுற்றிலும் உள்ள மரங்களின் நடுவில் தனித்தன்மையாக ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ள இந்த அதிசய பனைமரத்தினை அந்த வழியாக செல்பவர்கள் ஒருநிமிடமாவது நின்று பார்த்துச் செல்வதை காணமுடிகிறது.
    Next Story
    ×