search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் - தரைப்பாலம் இடிந்தது
    X

    வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் - தரைப்பாலம் இடிந்தது

    வாணியம்பாடி-புல்லூர் இடையே கட்டப்பட்டுள்ள மூலக்கொல்லை தரைப்பாலம் மழை வெள்ளத்தில் உடைந்தது. இதனால் வாணியம்பாடி-புல்லூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வாணியம்பாடி:

    தமிழக, ஆந்திர எல்லையில் பெய்த கன மழை காரணமாக வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. இதையடுத்து இடி மின்னலுடன் கன மழை பெய்தது. தொடர்ந்து அரை மணிநேரம் ஆலங்கட்டி மழை பெய்தது.

    இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆலங்கட்டியை கையில் எடுத்து விளையாடினர். தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதே போல வாணியம்பாடி ஒட்டியுள்ள ஆந்திர வன பகுதிகளிலும், பலத்த மழை பெய்தது.

    ஆந்திர வனப்பகுதியில் இருந்து வந்த மழை வெள்ளம் தொடர்ந்து வந்ததால் ஆந்திர எல்லையில் கட்டப்பட்டுள்ள 20 தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்தது.

    தமிழக எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை நேற்று இரவு நிரம்பியது. தொடர்ந்து வெள்ளம் தமிழக எல்லைக்குள் பாய்ந்தது. இன்று காலை 10. கி.மீ தூரம் தமிழக எல்லைக்குள் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

    வாணியம்பாடி-புல்லூர் இடையே கட்டப்பட்டுள்ள மூலக்கொல்லை தரைப்பாலம் மழை வெள்ளத்தில் உடைந்தது. இதனால் வாணியம்பாடி-புல்லூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     வாணியம்பாடி-ஆம்பூர் இடையே பாலாற்றில் மணல் அள்ளியதால் ராட்சத பள்ளங்கள் உள்ளது. இதனால் பாலாற்றில் வெள்ளம் வருவது தமிழக எல்லைக்குள் வேகம் குறைந்துள்ளது.

    ஆற்காடு பகுதியிலும் நேற்று மாலை சூறைக்காற்றுடன் அரைமணி நேரம் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆம்பூரில் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    வேலூர்-2.7
    ஆம்பூர்-34.8
    வாணியம்பாடி-45.3
    ஆலங்காயம்-22.8
    வாலாஜா-6
    சோளிங்கர்-13
    திருப்பத்தூர்-29.1
    ஆற்காடு-8.3
    குடியாத்தம்-10
    மேல் ஆலத்தூர்-12.6

    அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் மழை பெய்யவில்லை.


    Next Story
    ×