search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி சான்றிதழ் தயாரித்து கள்ளத்தனமாக அம்மா சிமெண்டு விற்பனை: அதிகாரி விசாரணை
    X

    போலி சான்றிதழ் தயாரித்து கள்ளத்தனமாக அம்மா சிமெண்டு விற்பனை: அதிகாரி விசாரணை

    ஆற்காடு அருகே போலி சான்றிதழ் தயாரித்து கள்ளத்தனமாக அம்மா சிமெண்டு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து முறையாக விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு சிவில் சப்ளை குடோன் மூலம் விற்பனை செய்ய வேண்டிய அம்மா சிமெண்டு தேசிய நெடுஞ்சாலையில் பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டது.

    500 சதுர அடி முதல் 1,500 சதுர அடி அளவில் வீடு கட்டுபவர்களுக்கு தமிழக அரசு மூலம் மலிவு விலையில் ரூ.190-க்கு அம்மா சிமெண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வீடு கட்டும் மக்கள் அம்மா சிமெண்டு வாங்க வேண்டும் என்றால் அந்தப் பகுதியைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. ஆகியோரின் சான்று மற்றும் வரி கட்டிய ரசீது ஆகியவற்றை இணைத்தும் கட்டடத்தின் பிளான் மற்றும் சான்றுகளையும், சிமெண்டு, மூட்டைகளுக்குண்டான டிராப்டையும் கொடுத்தால் தான் அம்மா சிமெண்டு சப்ளை செய்யப்பட வேண்டும்.

    ஆனால் இடைத்தரகர்கள் மூலம் போலியான சான்றுகளை தயார் செய்து இதை சிவில் சப்ளை குடோனில் கொடுத்து அம்மா சிமெண்டு எடுத்துச் சென்று வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 6 மாத காலமாக ஆற்காடு சிவில் சப்ளை குடோனில் இடைத்தரகர்கள் போலிச்சான்று கொடுத்து 30 ஆயிரம் சிமெண்டு மூட்டைகளை பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 1.30 மணியளவில் ஆற்காடு சிவில் சப்ளை குடோனுக்கு வந்த 350 சிமெண்டு மூட்டைகள் கொண்ட 2 லாரிகள் மேல் விசாரம் பைபாஸ் சாலை தனியார் மருத்துவமனை எதிரில் உள்ள பிளாட்பாரத்தில் நின்றன.

    லாரியில் இருந்த மூட்டைகளை லோடு வேன்மூலம் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் இடைத்தரகர்கள் ஏற்றிச் சென்றனர்.

    இது பற்றி தகவலறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கலெக்டர் ஆர்.டி.ஓ. ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மாலை வரையில் எந்த அதிகாரிகளும் வந்து விசாரணை செய்யவில்லை.

    இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு சிவில் சப்ளை மண்டல மேலாளர் குப்பம்மாளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதையடுத்து கும்பம்மாள் மேல்விஷாரம் பைபாஸ் சாலைக்கு வந்து விசாரணை செய்தார்.

    அப்போது சிவில் சப்ளை குடோனை சேர்ந்தவர்கள் அங்கிருந்த தனியார் கட்டத்தின் சுவற்றில் குறைந்த விலை அம்மா சிமெண்டு இங்கு கிடைக்கும் என்ற போர்டை ஆணி அடித்து மாட்டினர்.

    இது பற்றி அவர்களிடம் விசாரித்தபோது இது சிவில் சப்ளை குடோன் என்றும் இங்கு சிமெண்டு இறக்குவதற்காக வந்த லாரிகள் பழுதடைந்து விட்டதால் லாரியில் இருந்து லோடு வேனில் ஏற்றினர் என்றும் கூறினர்.

    அங்கிருந்த மக்கள் ஒரு லாரிதான் ரிப்பேர் ஆகும். ஒரே நேரத்தில் இரண்டு லாரிகளும் ரிப்பேர் ஆகிவிட்டதா? என்று கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

    இது குறித்து முறையாக விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×