search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு துரோகம் செய்கிறார் பன்னீர்செல்வம்: நாஞ்சில் சம்பத்
    X

    பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு துரோகம் செய்கிறார் பன்னீர்செல்வம்: நாஞ்சில் சம்பத்

    பதவி, சுகங்களை அனுபவித்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்கிறார் என்று திருவாடானை பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
    திருவாடானை:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அ.தி. மு.க. அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் நாஞ்சில்சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க.வில் பெரும் தலைவராக விளங்கியவர் ஜெயலலிதா. இந்த இயக்கத்தை நிறுவிய எம்.ஜி.ஆர். நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு அவருடைய மறைவுக்கு பிறகு அ.தி. மு.க.வை கட்டிக்காத்து இந்திய துணைக்கண்டத்தில் பெரிய கட்சியாக உயர்த்தியவர் அவர்.

    இந்த இயக்கத்தை வழி நடத்த பெரும் பங்கு வகித்தவர் சசிகலா. ஒரு போதும் சசிகலா கட்சியிலோ, ஆட்சியிலோ பதவிகளை அலங்கரிக்க நினைக்கவில்லை. இந்த நாட்டின் 3-வது முறையாக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க வாசல் அமைத்து தந்தவர் சசிகலா என்பதை ஓ.பன்னீர்செல்வம் மறந்து விட முடியாது.

    அவர்தான் முதல்- அமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்றும் முன்மொழிந்தவர். ஆனால் இன்று சசிகலாவை தூக்கி எறிய வேண்டும் என்கிறார்.

    தமிழகத்தில் தற்போது 140 ஆண்டுகள் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல் தூரம் செல்ல வேண்டியுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ரூ. 800 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

    தமிழக மாணவர்கள் டாக்டர் படிப்புக்கு நீட் தேர்வை மத்திய அரசு திணித்துள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் பலர் டாக்டர் ஆவதை மோடி அரசு தடுத்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

    நாடு முழுவதும் நன்மை செய்ய 3 ஆயிரம் மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையிலும் இந்த அரசு தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை தொடர்ந்து ஜெயலலிதா வழியில் செய்து வருகிறது.

    இந்த கட்சியில் அனைத்து பதவி சுகங்களையும் அனுபவித்துவிட்டு அ.தி. மு.க.வுக்கு பச்சைத்துரோகம் செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம். எந்த நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு அவர் வர வேண்டும். இன்று அ.தி.மு.க.வுக்கு துன்பமான நேரம். கட்சியின் பொதுச்செயலாளரும், துணை பொதுச்செயலாளரும் சிறையில் உள்ளனர்.

    இந்த இயக்கத்திற்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை தாங்கி இந்த இயக்கம் ஜெயலலிதா சொன்னதுபோல பல நூறு ஆண்டுகள் நிலைத்து நின்று ஜெயலலிதாவின் பாதையில் தொடர்ந்து பயணிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×