search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் இடி-மின்னலுடன் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
    X

    கோவில்பட்டியில் இடி-மின்னலுடன் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

    கோவில்பட்டியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. பருவ மழை பொய்த்ததால் எட்டயபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிட்டன. சாலைகளில் கானல் நீர் தோன்றுவதோடு, அனல் காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இந்நிலையில் கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை சுமார் 4.30 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் சிறிது நேரத்தில் சூறை காற்று, இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறை காற்று வீசியதில் கோவில்பட்டி சுபாநகர், பார்க்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    கோடை வெயிலில் தவித்து வந்த பொதுமக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த இந்த திடீர் மழையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். கோவில்பட்டி புதுக்கிராமத்தில் தனியார் எந்திர தீப்பெட்டி தொழிற் சாலை உள்ளது. இதன் வளாகத்தில் தீக்குச்சி குடோன் உள்ளது. மழை பெய்த போது இங்குள்ள குடோன் மின்சார வயரில் மின்னல் தாக்கியதில் தீப் பிடித்து எரிந்தது. இதனால் தீக்குச்சி குடோன் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    Next Story
    ×