search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளம் போல் காட்சியளிக்கும் பாபநாசம் காரையாறு அணை.
    X
    குளம் போல் காட்சியளிக்கும் பாபநாசம் காரையாறு அணை.

    அடிமட்டத்திற்கு சென்ற அணைகளின் நீர்மட்டம்: 3 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

    பாபநாசம் அணையில் 26 ஆண்டுகளுக்கு பின் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகி உள்ளது.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பருவ மழைகள் பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. நெல்லை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறன்ட நிலை காணப்படுகிறது. பொதுவாக நெல்லை மாவட்டத்திற்கு தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்குபருவ மழையும் கைகொடுக்கும். இந்த இரு பருவ மழைகள் மூலம் ஏராளமான ஏக்கரில் விவசாயம் நடைபெறும். மூன்று போகம் நெல் விளையக்கூடிய இடங்களும் உள்ளன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகவே மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை.

    2 ஆண்டுக்கு முன்பு கடும் மழையினால் அணைகள் நிரம்பி வழிந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கட்லைல் சென்று கலந்தது. அதன்பிறகு கடந்த ஆண்டும் பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இந்த ஆண்டு இரு பருவ மழைகளுமே பெய்யாதது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அணைகள், குளங்கள் வறண்டு உள்ளன. மாவட்டமே வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.

    போதாக்குறைக்கு வாட்டி வதைக்கும் வெயிலால் மக்களும், மலைவாழ் உயிரினங்களும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளன. வன விலங்குகள் போதிய தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் வந்துவிடுகின்றன. அவ்வப்போது காற்றுடனும், இடி-மின்னலுடனும் பெய்யும் மழை மக்களுக்கு பயனுள்ள‌தாக இல்லை. மாறாக சேதங்களைதான் ஏற்படுத்துகின்றன.


    தண்ணீரின்றி காணப்படும் மணிமுத்தாறுஅணை

    மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், நம்பியாறு, கொடுமுடியாறு, வடக்குபச்சையாறு ஆகிய 11 அணைகள் உள்ளன. இந்த அணைகள் மூலமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாய தேவையும், நெல்லை-தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் குடிநீர் தேவையும் பூர்த்தியாகிறது.

    தற்போதைய சூழலில் இந்த அணைகளில் தண்ணீர் குறைந்துவிட்டதால் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணையின் மொத்த உயரம் 143 அடிஆகும். இந்த அணை நீர்மட்டம் இன்று காலை வெறும் 19.70 அடியாக உள்ளது. சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை இந்த அளவுக்கு தண்ணீர் குறைந்ததாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

    அதன்பிறகு இந்த அணை இப்போதுதான் வறண்ட நிலையை எட்டியுள்ள‌து. இருக்கும் 19.70 அடியில் சுமார் 17 அடிவரை சகதி இருக்கும் என்பதால் 2 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இது இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே குடிநீருக்கு போதுமானதாக இருக்கும். அணைக்கு வெறும் 1 கன அடி தண்ணீரே வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகி உள்ளது.

    ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பல இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. இந்த சூழலில் அணையில் நீர் குறைந்து வருவதால் குடிநீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 75 அடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டமும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது.

    இந்த அணையின் உச்சநீர்மட்டம் 156 அடி. இன்று காலையில் இந்த அணை நீர்மட்டம் வெறும் 16.40 அடியாகவே உள்ளது. கடந்த ஆண்டு இந்த அணை நீர்மட்டம் 90 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.30 அடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே நாளில் 84 அடியாக இருந்தது. கடனா அணை நீர்மட்டம் 45.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 28.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 31.89 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 22.10 அடியாகவும் உள்ளன.

    நம்பியாறு, கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து அணைகள் வறண்டு போகும் நிலையில் உள்ளது. அடவிநயினார் அணையில் 30 அடி தண்ணீரே உள்ளது. இதே நிலை இன்னும் ஒரு வாரம் நீடித்தால் அணைகள் வறண்டு நெல்லை மாவட்டம் மேலும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும். நெல்லை மாவட்ட நிர்வாகம், குடிநீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

    Next Story
    ×