search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் அருகே கொள்ளிடம் புதை மணலில் சிக்கி 2 குழந்தைகளுடன் தாய் பலி
    X

    கும்பகோணம் அருகே கொள்ளிடம் புதை மணலில் சிக்கி 2 குழந்தைகளுடன் தாய் பலி

    கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் புதை மணலில் சிக்கி 2 குழந்தைகளுடன் தாயும் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அணைக்கரை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை அங்காளம்மன் கோவில் மீனவர் தெருவை சேர்ந்தவர் மருதையன். தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி ராஜேஸ்வரி (33). இவர்களுக்கு யாசினி (8) என்ற பெண் குழந்தையும், மாதவன் (5) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.

    நேற்று மாலை ராஜேஸ்வரி குழந்தைகளோடு கொள்ளிடம் ஆற்றில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார்.

    அப்போது மாதவன் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி உள்ளான்.யாசினியும் அவனுடன் சென்றாள். அவர்களை அழைத்து வர ராஜேஸ்வரி சென்றார்.

    அதற்குள் 2 குழந்தைகளும் அங்குள்ள புதை மணலில் சிக்கி நீரில் மூழ்கினர். அவர்களை காப்பாற்ற சென்ற ராஜேஸ்வரியும் தண்ணீருக்குள் இறங்கிய போது அவரும் மணலில் சிக்கி நீரில் மூழ்கி இறந்தார்.

    அப்பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைகளை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்னர். குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள் 2 குழந்தைகளும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன் திரண்டனர். இதற்கிடையே ராஜேஸ்வரியின் உடலும் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.

    கொள்ளிடம் ஆற்றில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது.இதில் 2 குழந்தைகளுடன் தாயும் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அணைக்கரை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×