search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கூடுதலாக 100 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
    X

    சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கூடுதலாக 100 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு

    சென்னையில் குடிநீர் பிரச்சினையை போக்கும் வகையில் கூடுதலாக 100 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகளில் சோழவரம் ஏரி முற்றிலுமாக வறண்டுவிட்டது. பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் மூலம் சென்னையில் ஓரளவுக்கு குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படுகிறது.

    தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் தண்ணீர் ஆவியாவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், விவசாய பம்பு செட்டுகள், நெய்வேலி சுரங்க தண்ணீர் மூலமும் சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வீடுகள் மற்றும் தெருவில் உள்ள குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதுடன், பொதுவான இடங்களில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது.

    இதில் ஒரு சில இடங்களில் தண்ணீர் முறையாக நிரப்புவதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளால் பொதுமக்கள் தண்ணீருக்கு அல்லல்படும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாநகரப் பகுதிகளில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

    சென்னை மாநகர் முழுவதும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள், தெரு குடிநீர் குழாய்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளுக்கு தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் 10 ஆயிரத்து 649 குடிநீர் தொட்டிகள் (சின்டெக்ஸ் பிளாஸ்டிக் தொட்டிகள்) அமைக்கப்பட்டு உள்ளன.

    தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்போது கூடுதலாக 100 இடங்களில் புதிய தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு, அவற்றிலும் தினசரி 2 வேளையும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

    இதுதவிர 64 தண்ணீர் தொட்டிகள் டேங்கர் லாரிகளில் பொருத்தப்பட்டு தண்ணீர் தேவைப்படும் இடங்களுக்கு லாரிகளில் கொண்டு சென்று வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தண்ணீர் கிடைக்காத பொது மக்கள் அவசர தேவைக்கு, தலைமை அலுவலக புகார் பிரிவு 044-2845 4040 மற்றும் 044-4567 4567 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
    Next Story
    ×