search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை: நிர்வாகம்-தொழிற்சங்க உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு
    X

    போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை: நிர்வாகம்-தொழிற்சங்க உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்க நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
    தாம்பரம்:

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்க நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் போடுவதற்கான 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி கழகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து துறை செயலாளர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிதி துறை துணை செயலாளர் வெங்கடேஷ் மற்றும் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள், 47 தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையின் போது கடந்த 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது அளிக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றாமல் நிலுவையில் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

    இது தொடர்பாக தொழிற்சங்க உறுப்பினர்கள், நிர்வாகத்தினர் இணைந்து குழு அமைத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பு இது குறித்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பேச்சுவார்த்தை குறித்து தொ.மு.ச. பொருளாளர் நடராஜன் கூறியதாவது:-

    கடந்த 14-ந்தேதி அமைச்சரவை குழு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேலை நிறுத்தம் செய்த நாட்களை 4 நாட்கள் விடுப்பாக கருத வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் இப்போது 3 நாட்கள் என புதிதாக மாற்றி இருக்கிறார்கள். வேலை நிறுத்த நாட்களை வேலைக்கு வராததாக கருதினால் கடும் விளைவுகள் ஏற்படும் என சொல்லி இருக்கிறோம்.

    துணை குழு அமைத்து வருகிற 1-ந்தேதி பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் வருவதற்கு முன்பு அதை இறுதி செய்யலாம் என அறிவித்து இருக்கிறார்கள். அக்கறை இல்லாமல் செயல்பட்டால் நாங்கள் மீண்டும் போராடக்கூடிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவோம் எனவும் அவர்களிடம் தெரிவித்து இருக்கிறோம். அரசும், போக்குவரத்து கழக நிர்வாகங்களும் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும் என்பதையும் தெரிவித்து இருக்கிறோம்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை இருக்காது என வாய் மொழியாக உத்தரவாதம் தந்திருக்கிறார்கள். அந்த உத்தரவாதம் நிறைவேற்றப்படவில்லை என்றால் விபரீதமான விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமி கூறியதாவது:-

    13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 7 கட்டங்களாக நடைபெற்று உள்ளது. நிலுவை தொகை பாக்கிக்கு ரூ.750 கோடியை தமிழக முதல்-அமைச்சர் வழங்கி இருந்தார்கள். அந்த தொகை போதாது என்று வலியுறுத்தியதால் மேலும் ரூ.500 கோடி ஒதுக்கி ரூ.1,250 கோடி வழங்க உறுதி அளிக்கப்பட்டதன் விளைவாக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை முழுமையாக வழங்கப்படும். மீண்டும் நாளை மறுதினம் (சனிக்கிழமை) நிர்வாகம் - தொழிற்சங்க உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது.

    இதில் நல்ல சுமுகமான உடன்பாடு ஏற்பட்ட பிறகு வருகிற 1-ந்தேதி அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும். அந்த பேச்சுவார்த்தையில் தான் 13-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் ஊதிய உயர்வு எந்த அளவிற்கு உள்ளது என்பது தெளிவாக தெரியும்.

    இவ்வாறு கூறினார்.
    Next Story
    ×