search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது
    X

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது. ஜூன் முதல் வாரத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதி கடந்த ஆண்டு ஜூன் 24-ந் தேதி, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க அந்த ரெயில் நிலையத்துக்கு எதிரே உள்ள குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகித்தன.

    அதே சமயத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து பயணிகள் அதிகம் கூடும் முக்கிய ரெயில் நிலையங்களில் நிர்பயா திட்ட நிதியின் கீழ், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    விசாரணையின்போது, தெற்கு ரெயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு கமிஷனர் கே.கே.அஷ்ரப், “சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 82 ரெயில் நிலையங்களில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்” என்று கோர்ட்டில் தெரிவித்து இருந்தார். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. ரெயில் நிலைய நடைமேடை, ரெயில் நிலையத்துக்கு உள்ளே செல்லும் மற்றும் வெளியே வரும் வழி என மொத்தம் 24 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இவ்வாறு பொருத்தப்படும் கேமராக்கள் நான்கு திசைகளிலும் சுழலும் மற்றும் துல்லியமாக படம் பிடிக்கும் அம்சங்களை கொண்டது.

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாக அடுத்த (ஜூன்) மாதம் முதல் வாரத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டுள்ளதாகவும், இதைத்தொடர்ந்து படிப்படியாக பிற ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×