search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் வளர்கிறதா? தளர்கிறதா?
    X

    தமிழ் வளர்கிறதா? தளர்கிறதா?

    சிலப்பதிகாரத்தையோ, சங்க இலக்கியங்களையோ, தொல்காப்பியம் போன்ற மூலத்தையோ முழுமையாகப் படிக்காதவர்கள் பலர் தமிழ்த் துறைகளில் ஆங்காங்கே ஒளிவீசிக்கொண்டிருக்கின்றனர்.
    தமிழ் வளர்ந்ததால் அது தளர்கிறது போல தோன்றுகிறதா? அல்லது தமிழ் தளர்வதால் அது வளர்கிறது என்று தோன்றுகிறதா? என்று நான் ஆராயப்போவது இல்லை.

    பொதுவாக தமிழ் மொழி பழங்கால மொழி என்பதை எல்லோரும் அறிவார்கள். தமிழ் உயர் தனிச் செம்மொழி என்பதை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்தத் தன்மை இப்போது தமிழ் மொழியில் இருக்கிறதா? என்று பார்க்கவேண்டும்.

    செம்மொழி தன்மையில் ஒன்று அது மிகத் தொன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும். இரண்டு, பிறமொழி உதவி இல்லாமல் இயங்கக்கூடியதாக இருக்கவேண்டும். மூன்று, பழங்கால இலக்கிய, இலக்கணங்களை உடையதாக இருக்கவேண்டும். இக்காலத்திலும் அழியாது, வழக்கில் இருக்கவேண்டும். இப்படி மேலும் சிலவற்றையும் கூறலாம். அவற்றில் பழங்கால மொழியாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

    ஹரப்பா, மொகஞ்சதாரோ, கடல்கொண்ட தமிழகம் போன்றவற்றாலும், தொல்காப்பியம், சில சங்க இலக்கியங்கள் ஆகியவற்றை உடைமையாலும் தமிழ் உயர் தனிச் செம்மொழிதான். ஆனால் அது தனித்து இயங்குகிறதா? என்பதை ஆராய வேண்டி இருக்கிறது.

    இக்கால எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையாளும் மொழி, கலப்படமற்ற நல்ல தமிழ் மொழியாக இருக்கிறதா? ஆங்கிலம், உருது போன்ற பலமொழி கலப்புடையதாகத்தானே இருக்கிறது.

    ஆங்கில சொற்களைக்கூட அடையாளம் கண்டு பிரித்து அறிய முடிகிறது. ஆனால் உருது, அரபி போன்ற மொழிகளை அவ்வாறு அறியமுடியவில்லை.

    பல உருதுமொழி சொற்கள் தனித் தமிழ்ச் சொற்களைப்போலவே ஆளப்படுகின்றன. அவற்றில் உருது மொழிக்கு முதல் இடம் கொடுக்கலாம். ஏராளமான உருது சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. அவற்றை பிரித்து விலக்குவது எளிதான செயல் அல்ல.

    ஆகவே தமிழ் தனித்து இயங்கக்கூடியது என்பதிலே தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. ஆங்கில சொற்களும், உருது சொற்களும் தமிழில் கலந்துவிட்டன என்பதோடு அவற்றைக் கலந்து பேசுவதும், எழுதுவதுமே தமிழ் நாகரிகமாகக் கொள்ளப்படுகிறது.

    இதுமட்டுமே அன்றி எளிய தமிழ் என்னும் சாக்கில் தமிழ் சிதைக்கப்படுகிறது. எளிய தமிழ் என்பது எழுதுகிறவர்களுக்கு எளிய தமிழா? படிக்கிறவர்களுக்கு எளிய தமிழா? என்று எழுத்தாளர் பலர் தம் மொழி அறிவின்மையைப் படிப்பவர்கள் மீது சுமை ஏற்றிவிட்டு, கொச்சைத் தமிழில் எழுதத் தொடங்குகிறார்கள். அவை பிழையாகவும் இருக்கின்றன.

    எளிய தமிழ் என்றால், உறக்கம் என்பது வட தமிழ்நாட்டுக்கு அரிய சொல். ஆனால் தென் தமிழ்நாட்டுக்கு அதுதான் எளிய சொல்.

    அவரவர் தத்தமக்குத் தெரிந்த சொற்களை எளிய தமிழ் என்றும், தத்தமக்குப் பழக்கம் இல்லாத சொற்களை அரிய தமிழ் என்றும் எடுத்துக் கொண்டு விடுவதால், ஏராளமான நல்ல தமிழ்ச் சொற்கள் கழிக்கப்பட்டு, மறைக்கப்பட்டுவிட்டன. அதனால் கொச்சையும், வழுவும் உள்ள சொற்கள் மட்டுமே மதிக்கப்படுகின்றன. நடைமுறைக்குக் கொண்டுவந்தால் எல்லாச் சொற்களும், அறிந்த நல்ல தமிழ்ச் சொற்களாக மாறிவிடும்.

    மாவட்டம், நாடாளுமன்றம், சட்டப்பேரவை போன்ற பற்பல சொற்கள் இன்று எல்லோரும் ஆளும் எளிய நல்ல தமிழ்ச் சொற்களாக உள்ளன.

    அவை தொடக்கக்காலத்தில் அரிய சொற்களாகவும், ஆளத்தகுதி இல்லாத சொற்களாகவும் இருந்தன என்பதை யாம் நன்கு அறிவோம். இன்று அவை எல்லாம் கல்வி அறிவற்ற மக்களும் அறிந்து ஆளும் நல்ல சொற்களாக மாறிவிட்டன என்பதை நாம் காண்கிறோம்.

    எழுத்தாளர்கள், தமிழ்ப் புலவர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோர் நல்ல தமிழ் சொற்களைப் பயன்படுத்தினால், அவை எல்லோரும் அறிந்த நல்ல தமிழ் சொற்களாக வாழும்.

    தமிழ் படித்தவர்களிலேயே நல்ல தமிழ் சொற்களை ஆளக்கூடியவர்கள் குறைந்துவிட்டனர்.

    தமிழ் கல்வி தளர்ந்து, தேய்ந்து, சுருங்கிக்கொண்டு இருக்கிறது.

    அஞ்சல் வழிக் கல்வி எனும் தமிழ் கொலைக்களம் ஏற்பட்ட பின் மூல நூல்களைப் படித்தவர்களே இல்லை. தமிழ் முதுகலையில் முதல் மாணவராகத் தங்கப் பதக்கம் பெற்றவர்களுக்குத் தொல்காப்பியத்தில் ஒரு நூற்பாவைக் கூட சொல்லத் தெரியவில்லை.



    இப்படிப்பட்டவர்கள் 2 மற்றும் 3-வது தலைமுறைக்குச் சென்றுவிட்டனர். சிலப்பதிகாரத்தையோ, சங்க இலக்கியங்களையோ, தொல்காப்பியம் போன்ற மூலத்தையோ முழுமையாகப் படிக்காதவர்கள் பலர் தமிழ்த் துறைகளில் ஆங்காங்கே ஒளிவீசிக்கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில் தமிழ் வளர்ந்திருக்கிறது என்று, என்னால் கூற இயலவில்லை.

    -தமிழ் அறிஞர் மா.நன்னன்
    Next Story
    ×