search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம்
    X

    உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம்

    உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று நடைபெற்றது.

    அவைத் தலைவர் மதுசூதனன், எம்.பி.க்கள் மைத்ரேயன், ராஜேந்திரன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் மோகன், பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சண்முகநாதன், ஜெயபால், ராஜகண்ணப்பன், செம்மலை, கே.பாண்டியராஜன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:-

    தர்மயுத்தத்தின் வெற்றி இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். இந்த யுத்தம் எதற்காக தொடங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது வழியில் லட்சிய பாதையில், கொள்கையில் இருந்து இன்று ஆட்சியில் இருப்பவர்கள் தடம்புரண்டு இருக்கிறார்கள். கட்சியும், ஆட்சியும் மக்களுக்காக இருக்க வேண்டும் என்று நல்வழி காட்டியவர் ஜெயலலிதா. ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது.

    எந்த ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டிலும், எந்த ஒரு குடும்ப ஆதிக்கத்திலும் கட்சி சென்றுவிடக்கூடாது என்பதற்காக உடன்பிறந்த சகோதரியை கூட கட்சியில் சேர்க்காதவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் ஜெயலலிதாவும் கட்சியை கட்டிக்காத்து வந்தார். அதனால் தான் சசிகலாவையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார்.

    ஜெயலலிதா மரணமடையும் வரையில் யார் பொதுச்செயலாளர் என்று அடையாளம் காட்டவில்லை. ஆனால் இன்று யாரெல்லாம் இருக் கக்கூடாது என்று எண்ணினாரோ அவர்கள் கட்சியை, ஆட்சியை கைப்பற்றி ஆட்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். இதை மீட்டு எடுக்கத்தான் நமது தர்ம யுத்தம் தொடங்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று நாம் கேட்டு 100 நாட்கள் ஆகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு இதுவரையில் எந்த ஒரு பதிலையும் தெரிவிக்கவில்லை. அமைச்சர்கள் மாறி மாறி பேசுகிறார்கள்.

    ஜெயலலிதாவின் திட்டங்களை தொடர்ந்து செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சென்னையில் கார் தொழிற்சாலையும், அதனுடன் 18 துணை தொழிற்சாலைகளும் அமைய இருந்தது. ஆனால், இன்று அந்த தொழிற்சாலை ஆந்திராவுக்கு சென்றுவிட்டது.

    ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமா? இந்த அரசு செயல்படாத அரசாக இருப்பதாக மக்கள் தீர்மானித்து உள்ளனர். ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் பிரச்சினை குறித்து எதுவும் கவலைப்படவில்லை. வருகிற உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு மக்களின் தீர்ப்பு பெரிய பாடமாக அமையும்.

    இரு அணிகளாக பிரிந்து இருப்பதால், மு.க.ஸ்டாலின் இடையில் புகுந்து ஆட்சி செய்யலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது. அ.தி.மு.க. முழுவதும் நம்மிடம் தான் இருக்கிறது. அவர்களிடம் 2,417 நிர்வாகிகள் தான் உள்ளனர். அனைத்து தொண்டர்களும் நமது பக்கம் தான் இருக்கிறார்கள்.

    2 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதமரிடம் தமிழக பிரச்சினை குறித்து முறையிட்டேன். சாதாரண ஓ.பி.எஸ்.சுக்கு எப்படி பிரதமர் நேரம் ஒதுக்கி தருகிறார். எனக்கு நேரம் தரவில்லையே என்று மு.க.ஸ்டாலின் புலம்புகிறார். ஆட்சியை பிடிப்பதற்காக மு.க.ஸ்டாலின் சாலையோரமாக நடந்தும், டீ குடித்தும் மக்களை ஏமாற்ற பார்த்தார். ஆனால் மக்கள் ஏமாறவில்லை.

    ஜெயலலிதாவையே மீண்டும் ஆட்சியில் அமர வைத்தனர். அதை மறந்துவிட்டு இன்று ஆட்சி செய்துகொண்டு இருப்பவர்கள் நிலைதடுமாறி ஏதேதோ பேசி வருகிறார்கள். தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு ஆட்சியாளர்கள் ஆட்சி செய்யாவிட்டால் விரைவில் பெரிய மாற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×