search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி சாமியாருக்கு மாணவி கொடுத்த தண்டனை சரியா?
    X

    போலி சாமியாருக்கு மாணவி கொடுத்த தண்டனை சரியா?

    கேரள மாநிலத்தில் கங்கேசாநந்த தீர்த்த பாதர் என்கிற சாமியாருக்கு மாணவி அளித்த தண்டனை நூற்றுக்கு நூறு சரியே என்பதுதான் சட்டத்தின், சமுதாயத்தின் கருத்தாகும்.
    தி.மு.க. தலைவர் கருணாநிதி வசனத்தில் 1952-ம் ஆண்டு வெளிவந்த ‘பராசக்தி’ படத்தில், நீதிமன்றத்தில் சிவாஜி கணேசன் முழங்கும் கருத்துகளில், “கோவிலிலே குழப்பம் விளைவித்தேன், கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியை தாக்கினேன், அவர் பக்தர் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷம் ஆகிவிட்டதை கண்டிப்பதற்காக” என்பார். ஆனால் இன்றும் சாமியார்கள் என்ற பெயரில் கொடியவர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இத்தகைய போலி சாமியாருக்கு கேரளாவில் உள்ள சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், ஒரு நூதனமான தண்டனையை கொடுத்தது நாடு முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 54 வயதான கங்கேசாநந்த தீர்த்த பாதர் என்கிற ஹரி சுவாமி என்ற சாமியார் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு வீட்டுக்குப் போய், நான் பூஜை செய்கிறேன் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 15 வயது மாணவியை கற்பழித்து இருக்கிறார். அன்று முதல் அந்தப் பெண்ணை மிரட்டி மிரட்டியே இந்த கற்பழிப்பு நாடகம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தற்போது 23 வயதாகும் அந்தப் பெண், சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வாரத்தில் ஒரு நாள் மீண்டும் அந்தச் சாமியார் படுக்கை அறையில் இருந்த அந்த பெண்ணை அழைத்து, இயற்கைக்கு மாறான காமுக செயலை செய்வதற்கு முயற்சித்து இருக்கிறார். இந்த முறை அந்தப் பெண் மறுக்கவே, கத்தியை காட்டி மிரட்டியிருக்கிறார். ஆனால், வீரமிக்க அந்தப் பெண், அந்தக் கத்தியை பறித்து அந்த போலிச் சாமியாரின் பிறப்பு உறுப்பை அறுத்து எறிந்துவிட்டார்.

    நாடு முழுவதும் இந்த துணிச்சலான செயலுக்கு பெரும் பாராட்டு கிடைத்துள்ளது. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூட இந்தப் பெண் செய்தது துணிச்சலான நடவடிக்கை. சந்தேகமே இல்லை என்று பாராட்டி இருக்கிறார்.

    போலிச் சாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை. இதில், அந்தப் பெண் மீது வழக்கு எதுவும் போடக்கூடாது, தன் கற்பை காப்பாற்றுவதற்கு அவர் செய்த நடவடிக்கையை பாராட்ட வேண்டும் என்று பெரும்பாலான மகளிர் அமைப்புகள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பாராட்டினாலும், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், “இந்தப் பெண் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்ளாமல், போலீசாரை அணுகி இருக்க வேண்டும். நமக்கு நீதி நிலவும் சமுதாயம்தான் வேண்டும். எல்லோருமே தங்கள் கையில், கத்தியை எடுத்துக்கொள்ளும் சமுதாயம் அல்ல” என்று கூறியிருக்கிறார்.

    இந்தப் பெண் செய்தது சரியா?, தவறா? அவளை பாராட்ட வேண்டுமா?, அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என்று புகழ்பெற்ற சட்ட வல்லுநரிடம் கேட்டபோது, அவர் கூறிய கருத்து, இந்தப் பெண்ணின் கழுத்தில் மாலை போட வேண்டும் என்பது போல இருந்தது. அவர் கூறும்போது:-

    “ஒரு கண்ணுக்கு மறுகண் என்னும் வன்முறை உலகோர் அனைவரையும் குருடாக்கி விடும் என்று வாழ்நாள் எல்லாம் வன்முறையை எதிர்த்தும், அகிம்சையை போதித்தும் வந்த அண்ணல் காந்தி அடிகள் கூட கற்பழிப்பு பற்றி கூறும்போது, கற்பழிக்கப்படும் பெண் இயற்கையால் தனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் ஆயுதங்களாகிய பற்களையும், நகங்களையும் பயன்படுத்தி கற்பழிக்க முயற்சிப்பவனை கொன்றாலும் தவறல்ல என்று சொன்னார்.

    சட்டம் கூட தற்காப்பிற்காக ஒருவன் இன்னொருவனை தாக்குவதில் தவறில்லை என்று கூறுகிறது. இந்த கேரள பெண் மணியை பொறுத்தவரையில் இதுவரை வெளி வந்த செய்திகளின்படி (அவற்றின் உண்மை தன்மையை நீதிமன்றம் பரிசீலிக்கும் வரை) அந்த ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொண்டு வலம் வந்த நபர், அந்த பெண்ணை சிறு வயதில் இருந்தே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்ததாக சொல்லப்படுகிறது.

    எனவே, அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய கோபம், தன்மான உணர்ச்சி ஆகியவற்றின் காரணமாக, ஒருநாள் அந்த நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயற்சிக்கும் போது, அந்த பாதிக்கப்பட்ட பெண்ணால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், சட்டப்படியும் கூட இதை தவறு என்று சொல்ல முடியாது.

    சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு (இந்திய தண்டனைச் சட்டம், பிரிவுகள் 97 முதல் 100 வரை) செய்யப்படும் எந்த ஒரு செயலும், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, செய்யப்பட்ட செயல் ஆகாது” என்றார்.

    ஆக, அந்த மாணவி செய்தது நூற்றுக்கு நூறு சரியே என்பதுதான் சட்டத்தின், சமுதாயத்தின் கருத்தாகும்.

    -(கடம்பூர் இடையர்காட்டார்)
    Next Story
    ×