search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் வரும் 30-ந்தேதி மருந்து வணிகர்கள் கடையடைப்பு
    X

    தமிழகம் முழுவதும் வரும் 30-ந்தேதி மருந்து வணிகர்கள் கடையடைப்பு

    ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 30-ந்தேதி மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக திருச்சியில் நடந்த மாநில கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருச்சி:

    தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர், செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.கே. செல்வன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மத்திய அரசு அகில இந்திய அளவில் ஆன்லைனில் மருந்துகள் விற்பனையை அனுமதியளிக்க உத்தேசித்துள்ள சட்டத்தினை எதிர்த்து வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) அன்று தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து மருந்து கடைகளும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது.

    8 லட்சம் உறுப்பினர்களை கொண்ட மருந்து வணிகர்களும், அதை நம்பியுள்ள 40 லட்சம் பணியாளர்களும், அவர்கள் குடும்பத்தினர் சுமார் 1.50 கோடி பேரும் பாதிக்கப்படுவார்கள். மருத்துவமனைகளில் உள்ள மருந்துக்கடைகள் தவிர சுமார் 30 ஆயிரம் மருந்துக்கடைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கும்.

    வருகிற 30-ந்தேதி தமிழகம் முழுவதும் 33 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டு போராட்டத்தில் பங்கேற்பதால் பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே மருந்துகள் வாங்கி வைத்திட வேண்டுகிறோம். உயிர்காக்கும் மருந்துகள் அவசரமாக தேவைப்பட்டால் உடினடியாக மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    ஆன்லைன் மூலம் வாங்கப்படும் மருந்துகளில் போலியான மருந்துகள் விற்கப்படும் அபாயமும், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் விபரீதமும், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் போதை மருந்துகள், கருத்தடை மற்றும் ஊக்க மருந்துகளை சுலபமாக வாங்கிட வழிவகுக்கும்.

    மேலும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஆன்லைனில் வாங்கினால் நோயாளிகளின் உடலுக்கு அது ஒவ்வாமை எனில் அதனை மாற்றித்தருவது என்பது இயலாத ஒன்றாகி விடும். நோய் எதிர்ப்பு மருந்துகள் கட்டுப்பாடற்று விற்பனை செய்யப்பட்டு உட்கொள்ளப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயாளிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது என்பதால் இதனை எதிர்க்கிறோம்.

    மத்திய அரசு 1985-ம் ஆண்டு அறிவித்த லாப சதவீதம் தற்போது தயாரிப்பாளர்களால் கொடுக்கப்படுவது இல்லை. எனவே மொத்த வியாபாரிகளுக்கு 10 சதவீதமும், சில்லறை வணிகர்களுக்கு 20 சதவீதமும் லாப சதவீதத்தை உறுதிப்படுத்த வேண்டும். மருந்து உரிம கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தியதை திரும்பப்பெற வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாநில பொருளாளர் கோபிநாதன், மாநில துணைத்தலைவர் மனோகரன், திருச்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், அமைப்பு செயலாளர் ஆனந்தன் உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×