search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வக்கீல்கள் மீது பார் கவுன்சில் எடுத்த நடவடிக்கை நிறுத்தி வைப்பு: நீதிபதி தலைமையிலான குழு உத்தரவு
    X

    வக்கீல்கள் மீது பார் கவுன்சில் எடுத்த நடவடிக்கை நிறுத்தி வைப்பு: நீதிபதி தலைமையிலான குழு உத்தரவு

    ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என ஐகோர்ட்டு அளித்த உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்திய வக்கீல்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் எடுத்த நடவடிக்கையை நிறுத்தி வைத்து நீதிபதி தலைமையிலான குழு உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்கக்கோரி தலைமை நீதிபதியின் கோர்ட்டு அறையில் வக்கீல்கள் சிலர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி, 2015-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி முதல் சென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

    அப்போது பெண் வக்கீல் ஒருவரை, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் செல்போனில் படம் பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில், ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் புகார் செய்தார். இதன் அடிப்படையில், வக்கீல்கள் முத்து ராமலிங்கம், அப்துல் ரகுமான், ஜார்ஜ் வில்லியம்ஸ், சத்தியபால், தினேஷ், ராஜராஜன், பிரசாத், அந்தோணி, கயல்விழி ஆகிய 9 பேரை வக்கீல் தொழில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டது.

    பின்னர், இந்த 9 வக்கீல்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த கர்நாடக மாநில பார் கவுன்சிலுக்கு மாற்றி, அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது. இதனை விசாரித்த கர்நாடக மாநில பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு, 9 வக்கீல்களையும், ஓர் ஆண்டுக்கு வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 9 வக்கீல்களும், அகில இந்திய பார் கவுன்சிலில் மேல்முறையீடு செய்தனர்.

    இதேபோல, இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்து. இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மதுரை வக்கீல் சங்கத்தின் தலைவர் ராமசாமி, செயலாளர் தர்மராஜ் உள்பட 13 வக்கீல்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்தது.

    பின்னர் இந்த விசாரணை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. 13 வக்கீல்கள் மீதான குற்றச்சாட்டை விசாரித்த கர்நாடக மாநில பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு, 5 பேரை வக்கீல் தொழிலில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்தும், 8 வக்கீல்களை 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 13 பேரும், அகில இந்திய பார் கவுன்சிலில் மேல்முறையீடு செய்தனர்.

    இதனிடையே ‘ஹெல்மெட் கட்டாயம்’ உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்திய மதுரை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் மீது ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்ட போது, கோர்ட்டு அறைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

    இதை கண்டித்து போராட்டம் நடத்திய 7 வக்கீல்கள் மீது தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு, ஜிம்ராஜ் மில்டன், பார்த்தசாரதி ஆகியோரை வக்கீல் தொழிலில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்தும், மகேந்திரனை 3 ஆண்டுக்கு வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்தும், மீதமுள்ள 4 வக்கீல்களை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய பார் கவுன்சிலில் 3 பேரும் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் விசாரிக்க பாட்னா ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற எல்.நரசிம்மரெட்டி தலைமையில், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்கள் அபூர்வகுமார் சர்மா, எஸ்.தாகூர் ஆகியோர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.

    இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளை நேற்று விசாரித்தது. பின்னர், 25 வக்கீல்களுக்கு எதிராக தமிழகம், கர்நாடக மாநில பார் கவுன்சில்கள் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
    Next Story
    ×