search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடை கீற்று கொட்டகையை பிரித்து பெண்கள் போராட்டம்
    X

    மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடை கீற்று கொட்டகையை பிரித்து பெண்கள் போராட்டம்

    மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 200- க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வாட்டார் கடைவீதியில் மதுக்கடை அமைந்துள்ளது. இங்கு மதுகுடிக்க வருபவர்களால் கடைவீதிக்கு வரும் பெண்களுக்கு தொல்லை ஏற்படுவதாக தெரிகிறது. இந்த மதுக்கடையை அகற்றக்கோரி தெற்கு வாட்டார், செல்லத்தூர், வழச்சேரி, புத்தூர், திருவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் மதுக்கடை முன்பு அமைக்கப்பட்டிருந்த கீற்றுக்கொட்டகையை அடித்து உடைத்து பிரித்து எறிந்தனர். பின்னர் அவர்கள் மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்வியன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட டாஸ்மாக் துணை மேலாளர் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் வரலட்சுமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய துணை செயலாளர் செந்தில்நாதன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது கடைவீதியில் அமைந்து உள்ள மதுக்கடையால் பெண்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கூறினர்.

    பின்னர், அதிகாரிகள் கூறுகையில், இந்த மதுக்கடை வருகிற 30-ந்தேதிக்குள் அகற்றப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    தஞ்சை கீழவாசல் மார்க்கெட் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு வருபவர்கள் சாலையோரத்தில் நின்று மது குடிப்பதால் அப்பகுதி மக்களுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாகவும் அக்கடையை அகற்ற வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் இந்து இளைஞர் எழுச்சி பேரவை நிறுவனர் பழ. சந்தோஷ்குமார் தலைமையில் பொதுமக்கள் டாஸ்மாக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடையை மூடக்கோரி கோ‌ஷம் எழுப்பியவாறு முன் பக்க கதவை இழுத்து பூட்டினர். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிவேல் மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×