search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு பெயர்கள் பரிந்துரை
    X

    3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு பெயர்கள் பரிந்துரை

    3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் முக்கியமான 3 பல்கலைக்கழகங்களான அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் நீண்ட காலமாக காலியாக இருந்தது.

    இதனால் அண்ணா பல்கலைக்ழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவே நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் பல மாணவர்களின் மேற்படிப்பு, வேலை உள்ளிட்டவைகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    துணைவேந்தரை நியமிக்க கோரி மாணவர் அமைப்பினர் முற்றுகை போராட்டங்கள் நடத்தினர். 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் வற்புறுத்தி வந்தார்கள்.

    இதற்கு மாற்று ஏற்பாடாக பட்டச் சான்றிதழ்களில் உயர் கல்வித்துறை செயலாளர் கையெழுத்திடுவார் என தமிழக அரசு அறிவித்தது. துணைவேந்தர் நியமனம் நியாயமான முறையில் நடைபெறும் என்றும் அரசு தலையிடாது என்றும் தெரிவித்தது.

    இதற்கிடையே 3 துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்காக தேர்வு கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியது. இதில் துணைவேந்தர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு பல்கலைக் கழகங்களின் வேந்தரான கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தேர்வு கமிட்டியினர் நேற்று முன்தினம் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதலில் அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கான துணைவேந்தர்கள் பெயர் பட்டியலை ஒப்புதலுக்காக வழங்கினார்கள்.

    நேற்று சென்னை பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் பெயர் பட்டியலும் கவர்னரிடம் வழங்கப்பட்டது. கவர்னர் வித்யாசாகர்ராவ் துணை வேந்தர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களை நேரில் வரவழைத்து நேர்காணல் நடத்தி தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பார்.

    துணைவேந்தர்கள் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் வெளியாகவில்லை.

    ஏற்கனவே மீன்வள பல்கலைக் கழகத்துக்கான துணைவேந்தரை கவர்னரே நேர்காணல் நடத்தி தேர்வு செய்தார். அதேபோல் தற்போது 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களையும் நேர்காணல் நடத்தி கவர்னர் தேர்வு செய்கிறார்.

    Next Story
    ×