search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா விரைவில் கடிதம் - “புதிய உத்தரவு வரும்”  என்று கருணாஸ் தகவல்
    X

    அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா விரைவில் கடிதம் - “புதிய உத்தரவு வரும்” என்று கருணாஸ் தகவல்

    அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா விரைவில் கடிதம் வர போவதாகவும் அதில் புதிய உத்தரவு வரும் என்றும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார்கள்.

    நேற்று மதியம் 3.30 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் பி.வெற்றிவேல் (பெரம்பூர்), தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), நடிகர் கருணாஸ் (திருவாடானை), கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் அமைச்சர் ரமணா, மொளச்சூர் பெருமாள் ஆகியோர் சென்று சசிகலாவை சந்தித்து பேசினார்கள்.

    இவர்களுடன் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியும் சென்றிருந்தார்.

    சுமார் 30 நிமிட நேரம் இவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், கட்சி, ஆட்சி செயல்பாடு பற்றியும் இவர்கள் சசிகலாவிடம் எடுத்து சொன்னதாக தெரிகிறது. அனைத்து வி‌ஷயங்களையும் அவர் பொறுமையாக கேட்டுக் கொண்டதாகவும், சில கருத்துக்கு மட்டும் பதில் சொன்னதாகவும் தெரிகிறது.

    சிறை சாப்பாடு சரியில்லாததால் அவர் உடல் மெலிந்து காணப்பட்டார்.

    சசிகலாவை சந்தித்து விட்டு வந்த நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கூறியதாவது:-


    கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்தேன். தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவரை சந்திக்கும் கட்சி நிர்வாகிகள் மூலமாக தெரிந்து கொள்கிறார்.

    கட்சி, ஆட்சியின் செயல்பாடு பற்றியும் அவர் அறிந்து கொள்கிறார். கட்சியும், ஆட்சியும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

    விரைவில் அவரிடம் இருந்து கட்சித் தொண்டர்களுக்கு புதிய உத்தரவு வரும். இதுதொடர்பான அறிவிப்பை அவர் கடிதமாக எழுத இருக்கிறார்.

    இவ்வாறு கருணாஸ் கூறினார்.

    கர்நாடக மாநில செயலாளர் வா.புகழேந்தி கூறியதாவது:-

    சசிகலா ஆரோக்கியமாக உள்ளார். தெளிவாக பேசுகிறார். அவரிடம் உடல்நலம் விசாரித்தோம். கட்சி நிலவரங்கள் பற்றியும், இப்போதுள்ள சூழ்நிலை பற்றியும் பேசினோம்.

    புரட்சித்தலைவி அம்மா விட்டுச்சென்ற கட்சி, ஆட்சியை காப்பாற்றி கட்டுக் கோப்பாக கொண்டு செல்ல வேண்டும். எந்த குழப்பமும் இன்றி நடைபெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். 2, 3 பேர் குழப்பம் செய்யத்தான் செய்வார்கள். அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. கட்டுக் கோப்பு, ஒற்றுமைதான் முக்கியம் என்று அறிவுரை வழங்கினார்.

    கட்சிக்கு  சசிகலா பொதுச் செயலாளர். விரைவில் அவரிடம் இருந்து தொண்டர்களுக்கு கடிதம் வரும்.

    இவ்வாறு புகழேந்தி கூறினார்

    Next Story
    ×