search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனது பிறந்த நாளுக்கு யாரும் பேனர் வைக்க வேண்டாம்: நாராயணசாமி வேண்டுகோள்
    X

    எனது பிறந்த நாளுக்கு யாரும் பேனர் வைக்க வேண்டாம்: நாராயணசாமி வேண்டுகோள்

    என் பிறந்த நாள் விழாவுக்காக யாரும் பேனர், கட்-அவுட் வைக்க வேண்டாம் என்று நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி புதுவை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராஜீவ்காந்தியின் உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் ராஜீவ்காந்தி உருவ படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

    விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நவீன இந்தியாவின் சிற்பியாக ராஜீவ்காந்தி திகழ்ந்தார். கம்ப்யூட்டர் இந்தியாவாக உருவாக அவர் காரண கர்த்தாவாக இருந்தார்.

    இன்று கம்ப்யூட்டர் சார்ந்த துறைகளில் இந்தியா கொடி கட்டி பறக்க அவர் தான் காரணம். அன்று ராஜீவ்காந்தியின் கொள்கையை எதிர்த்தவர்கள் எல்லாம் இன்று அவரது கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

    என் பிறந்த நாள் விழாவுக்காக யாரும் பேனர், கட்-அவுட் வைக்க வேண்டாம். சிலர் பிறந்த நாள் விழாவுக்கு பேனர் வைக்க விரும்புவார்கள். யார்- யாரெல்லாம் பேனர் வைத்துள்ளனர் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு வாரிய தலைவர் பதவி எல்லாம் அளித்தனர்.

    என்னை பொறுத்த வரை பேனர், கட்-அவுட் எனக்கு எதிரி. எனக்கு பிறந்த நாள் கொண்டாடும் வழக்கமும் இல்லை. அழகான, அமைதியான புதுவை திகழ அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவ படம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ராஜீவ்காந்தி சிலை நோக்கி சென்றது. இந்த ஊர்வலத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் நடந்தே சென்றனர். பின்னர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சப்தகிரி சிவக்கொழுந்து, புதுவை அரசின் டெல்லி பிரதிநிதி ஜான்குமார், எம்.எல்.ஏ.க்கள். அனந்தராமன், லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    அரியாங்குப்பம் தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவுதின நிகழ்ச்சி அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் ரோடு சந்திப்பில் நடந்தது. நிகழ்சிக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. மாநில காங்கிரஸ் துணை தலைவர் வினாயகமூர்த்தி, புதுவை அரசின் டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ராஜீவ்காந்தி உருவ படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

    விழாவில் முன்னாள் சேர்மன் ஆனந்தன், வட்டார காங்கிரஸ் துணை தலைவர் அசோக்ராஜ், காங்கேயன், திருநாவுக்கரசு, பாஸ்கர், வக்கீல்கள் வினாயகமூர்த்தி, ரவி, அன்புமணி, வசந்தராஜ், பாப்புலர் பாஸ்கர், அருளரசன், ராஜாராமன், கணேசன், பொன்னி, தனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் கிருமாம்பாக்கம் மற்றும் ஏம்பலம் ஆகிய பகுதிகளில் அனு சரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தெற்குமாவட்ட பொருளாளர் குமரேஸ் வரன், இளைஞர்காங்கிரஸ் தலைவர் பாலமுரளி உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊசுடு தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று பத்துக்கண்ணு சாலையில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ராஜீவ்காந்தி உருவபடத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர்கள் பிள்ளையார்குப்பம் பாலமுருகன், குமார், செங்கேணி, பக்கிரி, முருகன், தி.மு.க. பிரமுகர் மனோகரன், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெரியகாலாப்பட்டில் ராஜீவ்காந்தி நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ஜோசப் தலைமை தாங்கி ராஜீவ்காந்தி உருவபடத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் காலாப்பட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் பார்த்தீபன், சிங்காரம், லட்சுமணன், வளர்மதி, கோதண்டம், பக்தவச்சலம், பாண்டியன், முருகன், சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×