search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசாதது ஏன்?: வைகைச்செல்வன் போர்க்கொடி
    X

    எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசாதது ஏன்?: வைகைச்செல்வன் போர்க்கொடி

    எடப்பாடி பழனிசாமி அரசை மிரட்டும் வகையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகளை அழைத்து ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அம்மா அணியின் ஆட்சிக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்ற போது எப்படியும் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர்கள் பலர் எதிர் பார்த்தனர். ஆனால் மந்திரி சபை மாற்றம் பெரிய அளவில் நடக்க வில்லை. இதனால் பதவியை எதிர் பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசை மிரட்டும் வகையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். கொங்கு மண்டலத்தை சேர்ந்த தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். அதில் 6 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    இதற்கிடையே அ.தி.மு.க. வில் உள்ள எஸ்.சி, எஸ்.டி இன எம்.எல்.ஏ.க்கள் சுமார் 25 பேர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். அமைச்சரவையில் மிக முக்கிய இலாகாகளை எஸ்.சி, எஸ்.டி எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்திய திடீர் போராட்ட அறிவிப்பையும் இந்த அடிப்படையில் தான் அனைவரும் பார்த்தனர்.

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வனும் திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். நேற்று அவர் சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகளை அழைத்து ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சுமார் 12 பேர் அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் அந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பேசியவர்கள், பல்வேறு அதிருப்திகளை வெளியிட்டனர். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க எம்.எல். ஏ.க்களை அழைத்து பேச வேண்டும். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குழப்பத்தில் விடப்பட்டுள்ளதாக கூறினார்.


    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த தகவல்களை உறுதி செய்த முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், அந்த கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் யார்- யார் என்ற விவரத்தை தெரிவிக்க மறுத்து விட்டார்.

    வைகை செல்வன் தலைமையில் ஆலோசனை நடத்திய அ.தி.மு.க. நிர்வாகிகள் விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். அ.தி.மு.க அம்மா அணி வட்டாரத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×