search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை நகரில் உள்ள வைகை ஆற்றில் ரூ.62 கோடி செலவில் 5 இடங்களில் புதிய தடுப்பணைகள்: செல்லூர் ராஜூ
    X

    மதுரை நகரில் உள்ள வைகை ஆற்றில் ரூ.62 கோடி செலவில் 5 இடங்களில் புதிய தடுப்பணைகள்: செல்லூர் ராஜூ

    மதுரை நகரின் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.62 கோடி செலவில் 5 இடங்களில் புதிய தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
    மதுரை:

    மதுரை மாடக்குளம் கண்மாயில் ரூ.10 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை அமைச்சர் செல்லூர்ராஜூ இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தமிழகம் முழுவதும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் விவசாய நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி மதுரையில் குடிநீருக்காக உள்ள மாடக்குளம் கண்மாயின் கரை உயர்த்தப்பட்டு உள்ளது. 3,800 மீட்டர் நீளம் உள்ள இந்த கண்மாயில் 3 மடைகளும், ஒரு கழுங்கும் உள்ளன. இந்த கண்மாயில் தற்போது ரூ.10 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று உள்ளது.

    2017-2018ம் ஆண்டுக்குள் ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாடக்குளம் கண்மாய் ஆழப்படுத்தப்படும். அப்போது இந்த கண்மாய்க்கான நீர் வரத்து கால்வாய்கள் சீரமைப்பதுடன் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்.

    ரூ. 22 கோடி செலவில் வைகை ஆற்றில் குறுக்கே குடிமங்கலத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. இதன்மூலம் ஆண்டு முழுவதும் மாடக்குளம் கண்மாயில் தண்ணீர் தேங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தின் மூலம் கொடிமங்கலம், துவரிமான் போன்ற பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரூ.40 கோடி செலவில் மதுரை நகரின் வைகை ஆற்றின் குறுக்கே ஆரப்பாளையம், பேச்சியம்மன் படித்துறை, குருவிக்காரன்சாலை, தெப்பக்குளம் ஆகிய 4 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது இதன் திட்டம் மதிப்பு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    வருகிற ஆண்டில் ரூ.17 கோடி செலவில் மதுரை மாவட்டத்தில் உள்ள 137 கண்மாய்கள் குடிமராமத்து செய்யப்படும். வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் கண்மாய்கள் தூர்வாரும் நடவடிக்கை எடுக்கப்படும் நிலவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.15 கோடி மதிப்பில் 51 கண்மாய்கள் மராமத்து செய்யப்டும்.

    ரூ. 14.30 கோடி மதிப்பில் பந்தல்குடி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு இருபுறமும் தடுப்பு சுவர் கட்டப்படும். இந்த திட்ட பணிகள் எல்லாம் நிறைவேறும்போது மதுரை நகரின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட வருவாய் அதிகாரி வேலுச்சாமி, பொதுப் பணித்துறை பொறியாளர் சுப்பிரமணியன், முன்னாள் மேயர் திரவியம், நிர்வாகிகள் தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், கருப்புசாமி, சோலை ராஜா, மிசா செந்தில், பிரிட்டோ, ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×