search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியமங்கலத்தில் பூச்சி மருந்து குடோனில் தீ விபத்து: பல கோடி மருந்து எரிந்து நாசம்
    X

    அரியமங்கலத்தில் பூச்சி மருந்து குடோனில் தீ விபத்து: பல கோடி மருந்து எரிந்து நாசம்

    திருச்சி அரியமங்கலத்தில் இன்று அதிகாலை பூச்சி மருந்து குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் பல கோடி மதிப்பிலான மருந்து எரிந்து சேதம் அடைந்தன.

    திருச்சி:

    திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் சிவாஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் கோத்ரேஜ் நிறுவனத்தின் பூச்சி மருந்து விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

    இந்த குடோனில் இருந்து திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பூச்சி மருந்து அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    நேற்று வேலை முடிந்ததும் குடோனை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். இநத நிலையில் இன்று அதிகாலை பூச்சி மருந்து இருந்த குடோனில் இருந்து திடீர் புகை வெளியே வந்தது.

    சிறிது நேரத்தில் குபு... குபு... வென தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    பூச்சி மருந்து குடோன் 5 ஆயிரம் சதுரடியில் இருந்தது. தீ விபத்து மிக பெரிய அளவில் இருந்ததால் திருச்சி, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், பெல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    மேலும் திருச்சி மாநகராட்சி தண்ணீர் லாரி, தனியார் தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு பூச்சி மருந்து குடோனில் கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க போராடினர். 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பூச்சி மருந்து குடோனில் வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்து, பிளாஸ்டிக் டப்பா, மற்றும் அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததால் தீயை அணைக்க வீரர்கள் போராட வேண்டியிருந்தது.

    பிளாஸ்டிக் டப்பாக்கள் உருகி தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் ஏற்பட்ட புகை பல கி.மீட்டர் தூரம் பரவியது. பக்கத்தில் இருந்த காயிதே மில்லத்நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் புகையை சுவாசிக்க முடியாமல் வெளியேறினர். 5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    பிளாஸ்டிக் டப்பாக்கள் உருகி கடுமையான வெப்பம் நிலவியதால் பக்கத்தில் எண்ணெய் குடோன், சோப்பு குடோன் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குடோனில் உருகி கிடந்த பிளாஸ்டிக் டப்பா, அட்டை பெட்டிகளை கிளறி தண்ணீர் பீய்ச்சி அடித்து வெப்பம் தணிக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் பூச்சி மருந்து குடோனில் இருந்த பல கோடி மதிப்பிலான பூச்சி மருந்துகள், உரங்கள் நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது. சேதம் முழு விபரம் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள்.

    இந்த தீ விபத்து அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சியில் கடந்த சில நாட்களாக 107 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. இதில் ஏற்பட்ட வெப்பத்தால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவு காரணமா? அல்லது எதுவும் சதிவேலையா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த குடோன் உக்கடையைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு உதவி கமி‌ஷனர் வைத்தியநாதன், மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து தீயணைப்பு பணிகளை துரிதப்படுத்தினர். விரைந்து செயல்பட்டதால் அக்கம், பக்கத்தில் உள்ள குடோன்களுக்கு தீ பரவுவது தவிர்க்கப்பட்டது.

    Next Story
    ×