search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - ஜெ.அன்பழகன் வழங்குகிறார்
    X

    கருணாநிதி பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - ஜெ.அன்பழகன் வழங்குகிறார்

    தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்டக் கழக செயலாளர் ஜெ.அன்பழகன் தங்க மோதிரம் வழங்குகிறார்.
    சென்னை:

    தென்சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் அன்பகத்தில் மாவட்ட அவைத் தலைவர் எம்.டி.ஆர்.நாதன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்டக் கழக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 60-ம் ஆண்டு சட்டமன்ற வைரவிழா மற்றும் அவரது 94-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சட்டமன்றத்தில் கலைஞரின் 60-ம் ஆண்டு வைரவிழா, 94-வது பிறந்த நாள் விழா என இரு விழாக்களையும் இணைத்து தலைமை கழகம் சார்பில் மிகப்பெரிய விழா எடுக்கிறார்கள்.

    ராயப்பேட்டை ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் ஜூன் 3-ந்தேதி மாலை 5 மணிக்கு பிரமாண்டமாக நடத்தப்படும் பொதுக் கூட்டத்தில் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், பல மாநில முதல்-மந்திரிகள், வாழ்த்துரை வழங்க உள்ளனர். வரலாற்றில் இது ஒரு சரித்திர சாதனை நிகழ்ச்சியாக அமையும்.

    கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மேற்கு மாவட்டத்தில் ஜூன் 1, 2, 3 ஆகிய 3 நாட்களுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்ய வேண்டும்.

    ஜூன் 3-ந்தேதி அனைத்து வட்டங்களிலும் கழக கொடி ஏற்றி இனிப்பு, சர்க்கரை பொங்கல், உணவுகள் வழங்க வேண்டும். ஜூன் மாதம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும்.

    ஏழை-எளிய மக்களுக்கு வேட்டி-சேலை, பெண்ட் சர்ட்டுகள் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், பேனா, பென்சில், ஸ்கூல் பை வழங்குவதுடன் மருத்துவ முகாம் ரத்ததானம் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    ஜூன் 3-ந்தேதி திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும்.

    அனைத்து பகுதியிலும் கொடி ஏற்றி எழுச்சியுடன் கொண்டாடுவதுடன் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பொதுக்கூட்டத்திற்கு ஒரு வட்டத்திற்கு 500 பேர் வீதம் ஒவ்வொரு வட்டத்தில் இருந்தும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் கு.க.செல்வம் எம்.எல்.ஏ., எம்.கே.மோகன் எம்.எல்.ஏ., கே.எஸ்.வெல்டிங் மணி, துரை, செல்வி சவுந்தரராஜன், ராமலிங்கம், கே.ஏழுமலை, ஜெ.கருணாநிதி, மா.பா. அன்புதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.
    Next Story
    ×