search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவுடிகளை மாநிலத்தை விட்டு வெளியேற்ற நடவடிக்கை: நாராயணசாமி
    X

    ரவுடிகளை மாநிலத்தை விட்டு வெளியேற்ற நடவடிக்கை: நாராயணசாமி

    புதுவையில் சட்டம்-ஒழுங்கு கெடுவதை ஒருபோதும் வேடிக்கை பார்க்க மாட்டேன் எனவும் ரவுடிகளை மாநிலத்தை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களில் 8 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

    இதனால் புதுவையில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி இது சம்மந்தமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீராகத்தான் உள்ளது. தொழில்போட்டி, குடும்ப பிரச்சினை, ரவுடிகளுக்குள் இடையே உள்ள மோதல் போன்ற காரணங்களால் சிலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    ஆனாலும், இந்த கொலைகளை நான் நியாயப்படுத்தவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    புதுவையில் செயல்படும் ரவுடிகளை எந்தெந்தமாதிரி நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டுமோ? அதன்படி செய்யுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன்.

    முதலாவதாக குறிப்பிட்ட சில ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி சொல்லி இருக்கிறேன். புதுவையில் உள்ள ஒட்டுமொத்த ரவுடிகளையும் மாநிலத்தை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் சட்டம்-ஒழுங்கு கெடுவதை நான் ஒருபோதும் வேடிக்கை பார்க்க மாட்டேன். புதுவை மக்கள் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். எந்தவித அச்சுறுத்தலும் மக்களுக்கு இல்லை.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    புதுவையில் கொலை மற்றும் குற்றங்களை தடுப்பது சம்மந்தமாக போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். முதல்-அமைச்சர் உத்தரவுபடி பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதற்கு உயர் அதிகாரிகள் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

    இதன்படி முக்கிய ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×