search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை: தமிழ்நாடு மின் வாரியம் தகவல்
    X

    மின்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை: தமிழ்நாடு மின் வாரியம் தகவல்

    சமூக வலைத்தளங்களில் மின் வினியோகம் தொடர்பாக வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம், தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது
    சென்னை:

    சமூக வலைத்தளங்களில் மின் வினியோகம் தொடர்பாக வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம், தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் மின் வினியோகம் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் மின்வெட்டு அறிக்கை போன்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தற்போதைய பூர்த்தி செய்யப்பட்ட மின் தேவை நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இதனை ஈடுசெய்ய மின் கையிருப்பின் அளவு 17 ஆயிரத்து 400 மெகாவாட்டாக இருக்கிறது.

    மேலும், காற்றாலை மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியும், பகல் நேரங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் சுமார் 1,300 மெகாவாட் வரையும் மின் உற்பத்தி உள்ளது. காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து உள்ளதால், மின் கையிருப்பின் அளவு மின் தேவையின் அளவை விட அதிகமாகவே உள்ளது. காற்றாலை மின் உற்பத்தியில் இருந்து வெளி மாநிலங்களின் தேவைக்கேற்ப ஒரு யூனிட் ரூ.4.10 வீதம் மின் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆகவே மின் வினியோகம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வரும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்.

    தற்போது கோடைக்காலத்தில் அதிக மின்தேவை நிலைமையை எதிர்கொள்ள மின்வினியோகம், மின்உற்பத்தி, மின்இயக்கம் பற்றி மின்திட்ட உயர் அதிகாரிகளுடன் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை துறைவாரியாக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

    26-ந் தேதி இரவு காற்று திசையின் மாற்றம் காரணமாக வடசென்னையில் உள்ள உயர் அழுத்த மின்தொடர் கம்பிகளில் சிமெண்ட் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு மற்றும் மாசு படிவதால் மின் கடத்திகளில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டு மின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டது.

    மின்துறை அமைச்சர் உடனே தலைமை அலுவலகத்தில் உள்ள மின்கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்து சென்று உயர் அதிகாரிகளுடன் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். அதன்படி களப்பணியாளர்கள் மின் பாதையை இரவோடு இரவாக ஆய்வு மேற்கொண்டு பழுதுகளை சரி செய்து படிப்படியாக மின்சாரம் சீரமைக்கப்பட்டு அதிகாலையில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.

    கோடை கால மின்நிலைமையை எதிர்கொள்ள பிப்ரவரி முதல் இம்மாதம் 15-ந் தேதி வரை 1,022 மெகாவாட் அளவுக்கு குறைந்தகால நுழைஉரிமை மூலம் மின்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின் உற்பத்தி நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டால் மின்சந்தையில் 1,000 மெகாவாட் வரை மலிவான விலையில் (யூனிட் ஒன்றுக்கு ரூ.2.92 முதல் 3.95 வரை) மின்சாரம் தினசரி கொள்முதல் செய்ய வழிவகை உள்ளது.

    முன்பு எப்போதையும் விட கோடையின் தாக்கம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மிக அதிகமாகவே உள்ளது. இதனால் மின் உபகரணங்கள் ஆங்காங்கே பழுது ஏற்பட்டு தற்காலிக மின்தடை ஏற்படுகிறது. இருப்பினும் மிக குறுகிய நேரத்தில் சரி செய்யப்பட்டு உடனுக்குடன் மின் சீரமைப்பு செய்யப்படுகிறது. மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய அதிகாரிகளும் மற்றும் களப்பணியாளர்களும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×