search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணப்பாறை அருகே சொகுசு பஸ்-லாரி மோதி விபத்து: 2 பேர் பலி
    X

    மணப்பாறை அருகே சொகுசு பஸ்-லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

    மணப்பாறை அருகே சொகுசு பஸ்-லாரி மோதிய விபத்தில் கிளினர் உள்பட 2 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மணப்பாறை:

    கேரள மாநிலம் எர்ணா குளம், கொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய ஊர்களுக்கு சுற்றுலா வருவது வழக்கம்.

    அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொச்சி அருகே உள்ள கண்டத்திபரம் பூர், பட்டாஞ்சேரி, கல்லரக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50 பேர் சொகுசு பஸ்சில் சுற்றுலா வந்தனர்.

    நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி ஆகிய இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று இரவு அவர்கள் கொச்சி திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த பஸ் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள சவேரியார்புரம் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.50 மணிக்கு சென்று கொண்டிருந்தது.

    அப்போது முன்னால் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி கோதுமை லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது. சாலையில் இடதுபுறமாக சென்ற லாரியை சொகுசு பஸ் முந்த முயன்றது.

    இதில் எதிர்பாராத விதமாக லாரி மீது பஸ் உரசியது. இதில் பஸ்சின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த கொச்சியை சேர்ந்த இமானுவேல் (வயது 45) மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    மேலும் அந்த பஸ்சில் பயணம் செய்த கொச்சியை சேர்ந்த செலின் சேவியர் (70), அலீனா (21), பிந்து லெபின் (47), லெபின் (53), அகஸ்டின் (49), பிரசன்னா (65), லேயா (20), அசல்யா (17), சுர்ஜிதா (35), ஜோசப் (56), ஆக்னஸ் (46), ஷாஜூ (5), சாவித்திரி (47) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து நடந் ததும் பஸ்சில் இருந்து குதித்த டிரைவர் வினோத் தலைமறைவாகி விட்டார்.

    இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த இடத்தை மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத் தம்பி, வையம்பட்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    கோடை வாசஸ்தலமான கொடைக்கானல் செல்வதற்காக திண்டுக்கல் சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. அந்த சாலையில் விபத்து நடந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×