search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாட்டில் கொலை, கொள்ளை: கைதான 4 பேரிடம் அதிரடி விசாரணை
    X

    கொடநாட்டில் கொலை, கொள்ளை: கைதான 4 பேரிடம் அதிரடி விசாரணை

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டுக்குள் கொலை, கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரிடம் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொட நாடு பங்களாவில் கடந்த 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதும் தொடர்ந்து நடைபெறும் மர்ம சாவுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொள்ளை கும்பல் தாக்கியதில் உயிர்தப்பிய மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக பணியாற்றிய கனகராஜ் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரது நண்பரான கோவையை சேர்ந்த சயன் ஏற்பாட்டின் பேரில் கேரள கூலிப்படையினர் உள்பட 11 பேர் இதில் ஈடுபட்டனர். அவர்கள் பங்களாவில் இருந்த பணம்-நகைகளை அள்ளிச் சென்று விட்டனர்.

    அவர்களை பிடிப்பதற்காக கேரளா, சென்னைக்கு தனிப்படை விரைந்தது. போலீஸ் நெருங்கியதை அறிந்த கனகராஜ் போலீசாரிடம் சரணடைய சென்ற போது சேலம் அருகே கார் மோதி விபத்தில் பலியானார்.

    கனகராஜின் நண்பரான சயன் மனைவி வினு பிரியா, மகள் நீனு ஆகியோருடன் காரில் கேரளாவுக்கு தப்பி சென்ற போது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கினார்.

    வினுபிரியா, நீனு ஆகி யோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த சயன் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சயனுக்கு திருச்சூரை சேர்ந்த ஹவாலாகும்பலுடன் தொடர்பு உண்டு. அவர்கள் மூலம் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

    கனகராஜூம், சயனும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருச்சூர் சென்று ஹவாலா கும்பலின் முக்கிய புள்ளியும், சாமியாருமான மனோஜ் என்பவரை சந்தித்து பேசினர்.

    அவர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி 3 கார்களில் 11 பேர் வந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.

    இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சூரை சேர்ந்த சந்தோஷ் சாமி, தீபு, சதீ‌ஷன், உதயகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கொள்ளை மூலம் கிடைக்கும் பணத்தில் பங்கு தருவதாக மனோஜ் ஆசை காட்டியதால் அவருடன் வந்ததாக கைது செய்யப்பட்ட 4 பேரும் வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.

    இந்த கொள்ளையில் திருச்சூரை சேர்ந்த ஜிதின் ராய், ஜம்சத், குட்டி என்ற ஜிதின் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதில் ஜிதின் ராய், ஜம்சத் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

    இவர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். தலைமறைவாக உள்ள மனோஜ், குட்டி என்ற ஜிதின் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கேரளாவை சேர்ந்த சந்தோஷ் சாமி, தீபு, சதீ‌ஷன், உதயகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களை போலீசார் நேற்று தேவாலா போலீஸ் நிலையம் அழைத்து வந்து அதிரடி விசாரணை நடத்தினர்.

    இன்று காலை 4 பேரையும் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதா பங்களாவுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    சம்பவத்தன்று என்ன நடந்தது? என்பதை 4 பேரும் போலீசார் முன்பு நடித்துக் காட்டினார்கள். சுமார் 2 மணி நேரம் பங்களா சுற்றியுள்ள பகுதிகளில் அவர்கள் எந்த வழியாக வந்தனர்? காவலாளி ஓம் பகதூரை கொன்றது எப்படி? மற்றும் பங்களா அறைகளில் புகுந்தது குறித்து நடித்து காட்டினர்.

    சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த விசாரணையை அப்படியே போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

    கைதான 4 பேரையும் இன்று மதியம் 1 மணியளவில் குன்னூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினர்.

    அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு மாஜிஸ்திரேட்டிடம் மனுதாக்கல் செய்கிறார்கள்.

    இந்த சம்பவத்தில் போலீஸ் தேடும் மனோஜ் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஹவாலா பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    இந்த நிலையில் சயன் மூலம் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கும் திட்டத்தை வகுத்து அரங்கேற்றி உள்ளனர். அவர் பிடிபடும் போது இந்த திட்டத்தின் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்.

    Next Story
    ×