search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு எஸ்டேட் கொலை - கொள்ளை சம்பவம்: கேரளாவில் 5 பேர் சிக்கினர்
    X

    கொடநாடு எஸ்டேட் கொலை - கொள்ளை சம்பவம்: கேரளாவில் 5 பேர் சிக்கினர்

    கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை-கொள்ளை தொடர்பாக கேரளாவில் 5 பேரை கைது செய்து, தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந்தேதி நடந்த கொலை-கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொடநாடு எஸ்டேட்டிற்குள் 2 கார்களில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 10-வது நுழைவு வாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம்பகதூரை படுகொலை செய்தனர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை சரமாரியாக வெட்டிய அந்த கும்பல் ஜெயலலிதாவின் அறைக்குள் புகுந்தது.

    ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த தங்க, வைர நகைகள் மற்றும் பணம், சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்தது.

    இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    கொலை நடந்த அன்று கொடநாடு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களும் பழுதாகி இருந்தன. இதனால் கொள்ளையர்கள் வந்து சென்ற கார் குறித்து உடனடியாக துப்பு துலங்கவில்லை.

    இதையடுத்து கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக நீலகிரி மாவட்டம் முழுவதும் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொடநாடு எஸ்டேட்டுக்குள் 2 கார்கள் சந்தேகத்திற்கிடமாக வந்து சென்றது தெரியவந்தது. இந்த கார்களில் வந்தவர்கள் தான் காவலாளியை கொன்றுவிட்டு ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் எஸ்டேட், பங்களா நிர்வாகிகள், கொடநாட்டில் முன்பு வேலைபார்த்த டிரைவர், ஊழியர்கள் என சுமார் 100 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தினர். கொடநாட்டில் வேலை பார்க்கும் 10 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

    கொடநாடு பகுதியில் பதிவான அனைத்து செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே கொள்ளை சம்பவம் நடந்த அன்று சந்தேகத்திற்கிடமாக இனோவா காரை கூடலூர் அருகே போலீசார் மடக்கினர். ஆவணங்கள் இல்லாததால் காரை பறிமுதல் செய்தனர். காருக்கு சொந்தமானவர் கேரளாவில் இருந்து ஆவணங்களை கொண்டு வந்து காட்டி விட்டு காரை எடுத்து சென்றார்.

    கண்காணிப்பு கேமிரா வில் பதிவாகியிருந்த காரும், கூடலூர் அருகே பிடிப்பட்ட காரும் ஒன்றுபோல் இருந்ததால் அதுகுறித்து விசாரிக்க கேரளாவுக்கு ஒரு தனிப்படை போலீசார் சென்றனர். திருச்சூரில் வைத்து சம்பந்தப்பட்ட கார் மற்றும் காரில் வந்த 5 பேரை மடக்கி பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு காவலாளி ஓம்பகதூர் கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இவர்கள் எதற்காக ஓம்பகதூரை கொலை செய்தார்கள்? எஸ்டேட்டுக்குள் எதையெல்லாம் கொள்ளையடித்தார்கள்? இவர்களை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார்? யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    10-க்கும் மேற்பட்டவர்கள் 2 கார்களில் வந்து ஓம்பகதூரை தாக்கியதை பார்த்ததாக மற்றொரு காவலாளி கூறியிருந்தார். எனவே கொள்ளையர்கள் 2 பிரிவாக பிரிந்து தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    அதன்பேரில் மற்றொரு காரில் தப்பி சென்ற கும்பல் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் 23-ந்தேதி மதியம் கோத்தகிரி பகுதியில் ஒரு கார் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றது. அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் அந்த காரை ஒழுங்குப்படுத்த முயன்றார். அப்போது காரில் அ.தி.மு.க. கொடியுடன் 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்தனர். போலீஸ்காரர் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். அந்த காரால் போக்குவரத்துக்கு இடையூறு அதிகமாகவே உடனடியாக காரை அங்கிருந்து எடுத்து செல்லுமாறு போலீஸ்காரர் எச்சரித்தார். இதை தொடர்ந்து டிரைவர் காரை எடுத்து சென்றனர்.

    மறுநாள் அதிகாலை கொடநாடு எஸ்டேட்டில் கொலை-கொள்ளை நடந்துள்ளது. எனவே முந்தைய நாள் கோத்தகிரியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய காரில் வந்த 5 பேருக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்து கோத்தகிரியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அந்த கார் எண் மற்றும் அதில் இருந்த 5 பேர் பற்றியும் சில தகவல்கள் கிடைத்தது.

    அந்த கார் தற்போது சென்னையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை போலீசார் சென்னை வந்துள்ளனர். அந்த காரில் இருந்த 5 பேரை பிடித்து விசாரித்தால் இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

    இதற்கிடையே கொடநாடு கொலை - கொள்ளை சம்பவம் குறித்து காவலாளி சொன்ன தகவலின் அடிப்படையிலும், கண்காணிப்பு கேமராக்களில் கிடைத்த காட்சிகளின் உதவியுடனும் கொலையாளி ஒருவரது உருவப்படத்தை போலீசார் கம்ப்யூட்டரில் வரைந்துள்ளனர்.



    அவரது படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Next Story
    ×