search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வல்லூர் அனல்மின்நிலையம் மின் உற்பத்தியை தொடங்கியது
    X

    வல்லூர் அனல்மின்நிலையம் மின் உற்பத்தியை தொடங்கியது

    பாக்கி தொகையை உடனடியாக தர தமிழ்நாடு மின்சார வாரியம் சம்மதித்ததால் வல்லூர் அனல்மின்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின்சார உற்பத்தி தொடங்கியது.
    திருவள்ளூர்:

    பாக்கி தொகையை உடனடியாக தர தமிழ்நாடு மின்சார வாரியம் சம்மதித்ததால் வல்லூர் அனல்மின்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின்சார உற்பத்தி தொடங்கியது. இதனால் மின்வினியோகம் இனி சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வல்லூர் அனல்மின்நிலையத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பாக்கி வைத்திருந்ததால், ஒரு யூனிட் அதாவது 500 மெகாவாட் மின்சார உற்பத்தியை வல்லூர் அனல்மின்நிலையம் நிறுத்தியிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள் இருளில் மூழ்கியது.

    தமிழக மின்சார வாரியம் தாங்கள் பாக்கி வைத்துள்ள தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை உடனடியாகவும், மீதம் உள்ள தொகையை அடுத்த வாரத்திலும் தருவதாக வல்லூர் அனல்மின்நிலையத்துக்கு தெரிவித்தது. இதனை ஏற்று வல்லூர் அனல்மின் நிலையம் மின்உற்பத்தியை தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து மின்நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்க வேண்டிய 1,066.95 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள் இருளில் மூழ்கியது. இதனால் உடனடியாக தாங்கள் செலுத்த வேண்டிய பாக்கித்தொகையில் ரூ.215 கோடியை செலுத்தி விடுகிறோம். அடுத்த வாரத்தில் மேலும் ரூ.287 கோடி தருகிறோம். உடனடியாக மின்சார உற்பத்தியை தொடங்குங்கள் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டது. இதனை ஏற்று 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் ஒரு யூனிட்டை தொடங்கியுள்ளோம். இந்த யூனிட்டில் உற்பத்தி தொடங்கி 4 மணி நேரத்திற்கு பிறகு தான் மின்சாரம் வினியோகம் செய்ய முடியும். மாலை 4 மணி அளவில் 100 மெகாவாட் மின்சாரத்தை மின்தொடருக்கு (கிரிட்) அனுப்பி விட்டோம். 6.30 மணி அளவில் 500 மெகாவாட் சென்று விடும். மொத்தம் உள்ள 3 யூனிட்களில் 2 யூனிட்கள் இப்போது ஓடிக் கொண்டு இருக்கிறது. இனி சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு போதிய மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இனி மின்சார வினியோகம் சீராகும்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
    Next Story
    ×