search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் கள்ளழகர் 10-ந்தேதி இறங்குகிறார்
    X

    மதுரையில் சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் கள்ளழகர் 10-ந்தேதி இறங்குகிறார்

    மதுரையில் சித்திரை திருவிழாயொட்டி 10-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    அழகர்கோவில்:

    மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை திருவிழாவாகும். இந்த விழா நேற்று மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.

    தொடர்ந்து கள்ளழகர் பெருமாள் எழுந்தருளும் 400-க்கும் மேற்பட்ட மண்டபங்கள் முன்பு பந்தல்கால் நடும் பணி தொடங்கியது.

    முன்னதாக நூபுர கங்கையில் நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெற்றியில் நாமமிட்டு தண்ணீர் பீய்ச்சுவதற்காகவும், தீப் பந்தம் எடுப்பதற்காகவும், சாமி ஆடுவதற்காகவும் விரதத்தை தொடங்கினர்.

    வருகிற 6-ந் தேதி அழகர் கோவிலில் திருவிழா தொடங்குகிறது. 7-ந்தேதியும் திருவிழா நிகழ்ச்சி நடைபெறும். 8-ந் தேதி மாலை 7 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் கள்ளழகர் தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். 9-ந் தேதி அதிகாலையில் புதூர் மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும்.

    10-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

    11-ந் தேதி சே‌ஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுவார். தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிப்பார்.

    அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் விடிய விடிய நடைபெறும். 12-ந்தேதி அதிகாலையில் மோகன அவதாரத்தில் கள்ளழகர் காட்சி தருவார்.

    13-ந்தேதி அதிகாலையில் அங்கிருந்து பிரியா விடைபெற்று அழகர் திருமலை நோக்கி செல்கிறார். அன்றிரவு அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் காட்சி தருகிறார். 14-ந் தேதி காலையில் கள்ளழகர் கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேருகிறார். 15-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×