search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடைகளை நிரந்தரமாக மூட காலம் கனிந்து வருகிறது: ராமதாஸ்
    X

    மதுக்கடைகளை நிரந்தரமாக மூட காலம் கனிந்து வருகிறது: ராமதாஸ்

    குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகளை திறப்பதற்கு பெண்கள் போராட்டம் நடத்தி வருவதால், தற்போது மதுக்கடைகள் நிரந்தரமாக மூட காலம் கனிந்து வருகிறது என ராமதாஸ் பேசியுள்ளார்.
    சேலம்:

    உச்சநீதிமன்றத்தின் மூலம் மதுக்கடைகளை மூடுவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு சேலம் மாவட்ட பா.ம.க. சார்பில் பாராட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் சேலம் அஸ்தம்பட்டியில் நேற்று இரவு நடந்தது.

    மாநில துணை பொதுச்செயலாளர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கதிர்.ராசரத்தினம் வரவேற்றார். மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைத் தலைவர்கள் கார்த்தி, கண்ணையன், சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு, பசுமை தாயகம் சத்திரியசேகர், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் முதல்-அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாசை அறிவித்து அவருக்கு ஒரு பேனாவையும் கொடுத்தேன். அப்போது, ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நாள் முதல் கையெழுத்தாக, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான கையெழுத்து போட வேண்டும் என்று கூறினேன்.

    மகாத்மா காந்தி, தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் மதுவிற்கு எதிராக போராடினார்கள். அவர்களை தொடர்ந்து நானும் கடந்த 36 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராடி வருகிறேன்.

    தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னணி தலைவர்கள் தான் தற்போது மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள். ஆனால் பா.ம.க.வோடு சேர்ந்து தி.மு.க.வும் மதுக்கடைகளை மூட சொல்லி வலியுறுத்தி வருகிறது. தற்போது மூடப்பட்ட மதுக்களை திறப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகளை திறப்பதற்கு பெண்கள் போராட்டம் நடத்தி வருவதால், தற்போது மதுக்கடைகள் நிரந்தரமாக மூட காலம் கனிந்து வருகிறது. பா.ம.க.ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழகத்தை நாசமாக்கிவிட்டன. தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது. விரைவில் நல்லது நடக்கும். எனவே இருகட்சிகளையும் சேர்ந்தவர்கள் பா.ம.க.வில் இணையுங்கள்.

    இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பேசியதாவது:-

    உச்சநீதிமன்றத்தின் மூலம் தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகள் உள்பட இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகள் மூடிய பெருமை பா.ம.க.விற்கு உண்டு. குறிப்பாக சொல்லபோனால் தமிழ்நாட்டில் 60 சதவீதம் மதுக்கடைகள் மூடுவதற்கு பா.ம.க.வே காரணம். மதுவுக்கு எதிராக 36 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது.

    மூடப்பட்ட மதுக்கடைகளை தெருக்களில் திறக்க விடாமல் பெண்கள் தற்போது போராடி வருகிறார்கள். இந்த கோபம் தேர்தலில் ஏன் வரவில்லை. ஓட்டுக்கு ரூ.200, ரூ.300 வாங்கிக்கொண்டு மீண்டும் ஜெயலலிதாவை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்தீர்கள். ஆனால் என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும். சசிகலா பெங்களூரு சிறைக்கும், டி.டி.வி.தினகரன் டெல்லி சிறைக்கும் சென்றுவிட்டார்கள். தமிழகத்தில் நாள்தோறும் ஒரு நாடகம் நடக்கிறது. தமிழக அரசியலை பார்த்து புதுடெல்லியில் கேவலமாக சிரிக்கிறார்கள்.

    தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை மக்கள் தூக்கி எறிய வேண்டும். இளைஞர்கள் சுயமாக சிந்தித்தால் தமிழ்நாட்டில் நல்லது நடக்கும்.

    தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் பஞ்சத்தை போக்க நான் ஏராளமான திட்டங்களை வைத்திருக்கிறேன்.

    நல்லது யார் செய்வார்கள்? என்று பார்த்து வாக்களிக்க வேண்டும். மக்கள் சிந்திக்க தொடங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

    முன்னதாக கூட்டத்தில் மதுவை ஒழித்து தமிழக பெண்களின் தாலியை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பெண்ணின் கழுத்தில் தாலி தொங்குவது போன்ற நினைவு பரிசு சேலம் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் சார்பில் டாக்டர் ராமதாசிடம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×